தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு காலத்திற்கு ஏற்ப எந்த அளவுக்கு மாற்றத்தை கண்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் பெண்களுக்கென ஒரு தனி ஸ்டீரியோ டைப் கதாபாத்திரங்கள் இருக்கும். அதை வைத்தே பெண்களுக்கான கேரக்டர்கள் வடிவமைக்கப்படும். உதாரணாத்திற்கு ஒரு பணக்கார பெண், ஆடம்பர வசதிகள் இன்றி உழைத்து நேர்மையாக வாழும் இளைஞரை காதலிப்பார். ஆரம்பத்தில் திமிராக இருக்கும் நாயகியை நாயகன் அடக்கி தன் வழிக்கு கொண்டுவருதே கதையாக இருக்கும். குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனின் பெரும்பாலான படங்களில் இப்படியான காட்சிகளை பார்க்க முடியும்.
பெண்களின் குரலாக நின்ற படங்கள்
இதன்காரணமாக பணக்கார வீட்டு பெண் என்றாலே திமிர் பிடித்தவராக தான் இருப்பார் என்கிற பிம்பமும் தமிழ் சினிமாவில் இருந்தது. அதை ருத்ரைய்யா போன்ற இயக்குனர்கள் உடைக்க ஆரம்பித்தனர். அதற்கு சான்று 1978-ம் ஆண்டு அவர் எடுத்த ‘அவள் அப்படித்தான்’ திரைப்படம். அன்றைய சூழலில் அவரால் எப்படி இந்த படத்தை எடுக்க முடிந்தது என்கிற பிரம்மிப்பு இன்றளவும் உள்ளது. அதேபோல் பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு திரைப்படம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை பற்றி பேசியது.
இதையும் படியுங்கள்... international women's day | இந்தியாவின் டாப்10 பெண் தொழில்முனைவோர்!
பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்திய இயக்குனர்கள்
இதனால் காலப்போக்கில் அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம், அவர்கள், மனதில் உறுதி வேண்டும் என பெண்களை மையப்படுத்தி எடுக்கும் படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது. பெண் கதாபாத்திரங்களை திரையில் அழுத்தமாக பதிய வைத்த இயக்குனர்களில் பாலச்சந்தர் முக்கியமானவர். அவருக்கு அடுத்தபடியாக மகேந்திரன் வந்தார். பின்னர் பாலு மகேந்திரா தன் பங்கிற்கு மறுபடியும், கோகிலா, ரெட்டை வால் குருவி போன்ற படங்கள் வழியாக திருமணத்தை மீறிய உறவுகளை பற்றி வலுவாக பேசி இருந்தார்.
பெண்களை வில்லியாக காட்டிய 90ஸ்
80களைக் காட்டிலும் 1990களில் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி உருவான படங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கின. அந்த காலகட்டங்களில் பெண் வெறுப்பு படங்கள் அதிகமாக வரத்தொடங்கின. ரஜினி நடித்து 1999-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படையப்பா படத்திலேயே கிராமத்துப் பெண்ணை நல்லவராகவும், நகரத்து பெண்ணை வில்லியாகவும் காட்டி இருப்பார்கள். 2000-த்துக்கு பின் பெண்களை காதலிக்க, டூயட் பாட, அழுகாச்சி காட்சிகளில் நடிக்க மட்டும் பயன்படுத்த தொடங்கினார்கள்.
தமிழ் சினிமாவின் சிங்கப்பெண்கள்
2010வரை ஆண் ஆதிக்கம் உள்ள படங்கள் மட்டுமே அதிகளவில் வந்த நிலையில், அதன்பின்னர் ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் பெண்களை மையமாக வைத்து உருவாகும் படங்களில் அதிகளவில் நடிக்க தொடங்கினர். அதனால் 36 வயதினிலே, அறம், மகளிர் மட்டும், பொன்மகள் வந்தாள், அருவி, கனா என பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன. அதுமட்டுமின்றி சுதா கொங்கரா, புஷ்கர் காயத்ரி, ஹலிதா ஷமீம் போன்ற பெண் இயக்குனர்களின் வரவால் தமிழ் சினிமாவிற்கு சில்லு கருப்பட்டி, இறுதிச்சுற்று போன்ற முத்தான படைப்புகளும் கிடைத்துள்ளன. மற்ற திரையுலகை காட்டிலும் தமிழ் சினிமா பெண்களுக்கு தொடர்ச்சியாக முன்னுரிமை கொடுத்து வருவது கண்கூடாக தெரிகிறது. இது மேலும் பெருகும் என எதிர்பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... வயசாக வயசாக மெருகேறிக்கிட்டே இருக்க... நயனை ஒயினோடு ஒப்பிட்டு Women's Day வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்
