நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள, காதல் படமான 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

'சிந்து சமவெளி' படத்தின் மூலம் 2010 ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமான ஹரிஷ் கல்யாண், இந்த படத்தை தொடர்ந்து பொறியாளன், வில் அம்பு, உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்த போதிலும் இவருக்கு சொல்லுபடியான பட வாய்ப்புகள் அமையவில்லை. 

பின் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட பிக்பாஸ் முதல் சீசன், நிகழ்ச்சியில் வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்தார். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தும், வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே வந்ததால் வெளியேறும் சூழல் உருவானது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவான, 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் நடித்தார். காதல், லிவிங் டூ கெதர் மற்றும் திருமண வாழ்க்கையில் நடைபெறும் பிரச்சனை குறித்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தற்போது இவர் அடுத்து நடித்துள்ள படமான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்த நிலையில்,  தற்போது இந்த படம் மார்ச் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. 

 

ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்த படத்தில், விஜய் ஆன்டனி நடித்த 'காளி' படத்தில் அறிமுகமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார். மேலும் மாகபா ஆனந்த், பாலாசரவணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரஞ்சித் ஜெயகொடி இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.