’இனிமேல் எந்த இந்தியத் திரைப்படங்களும் திரையிடப்படாது. அதுமட்டுமல்லாமல், மேட் இன் இந்தியா விளம்பரங்களும் இனிமேல் பாகிஸ்தானில் ஒளிபரப்பாகாது. இதற்கான உத்தரவு பாகிஸ்தான் மின்னணு ஊடகங்கள் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது' என்று பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் சவுத்ரி பவாத் ஹூசைன் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள்மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால், இதுபோன்ற தாக்குதல் நடக்கவில்லை என்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. அச்செய்தியை மறுக்கும் பாகிஸ்தான்  நேற்றுமுதல் பாகிஸ்தானில் இந்தியத் திரைப்படங்கள் ரிலீஸ் செய்யவும், திரையிடவும் தடைவிதிக்கப்படும என்று  முடிவு செய்துள்ளது.

இந்தி திரைப்படங்கள் டோட்டல், தமால், லுகா சுப்பி, அர்ஜுன் பாட்டியாலா, நோட்புக், கபீர் சிங் ஆகிய திரைப்படங்கள் பாகிஸ்தானில் பல்வேறு நகரங்களில் ரிலீஸ் ஆக இருந்தது. சில மாதங்களுக்கு முன்பிலிருந்து ஒன்றிரண்டு தமிழ்ப்படங்களும் ரிலீஸாகத் துவங்கியிருந்தன.

இது குறித்து பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் சவுத்ரி பவாத் ஹூசைன் கூறுகையில், " நாட்டில் உள்ள சினிமா திரையிடுவோர் சங்கத்தினர் இந்தியத் திரைப்படங்களைப் புறக்கணிப்பார்கள். அதுமட்டுமல்லாமல்,  பாகிஸ்தான் மின்னணு ஊடகங்கள் ஒழுங்குமுறை ஆணையம்(பிஇஎம்ஆர்ஏ), இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் மேட் இன் இந்தியா விளம்பரங்களையும் ஒளிபரப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது " எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஹூசைன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில் " சினிமா திரையரங்குகள், வினியோகிஸ்தர்கள் அமைப்பு இந்தியத் திரைப்படங்களை புறக்கணித்துவிட்டார்கள். பாகிஸ்தானில் இனிமேல் எந்த இந்தியத் திரைப்படங்களும் திரையிடப்படாது. அதுமட்டுமல்லாமல், மேட் இன் இந்தியா விளம்பரங்களும் இனிமேல் பாகிஸ்தானில் ஒளிபரப்பாகாது. இதற்கான உத்தரவு பாகிஸ்தான் மின்னணு ஊடகங்கள் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது # பாகிஸ்தான்தயார்ஹே" எனத் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள்மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இந்தியத் திரைப்படங்களுக்குத் தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.