படப்பிடிப்பு தொடங்கி ஒரு ஷெட்யூல் கூட உருப்படியாக முடிவடையாத நிலையில், அதிக பட்ச சர்ச்சைகளை சந்தித்த ஒரு மெகா பட்ஜெட் படம் என்றால் அது ‘இந்தியன் 2’தான். தற்போது தேர்தலை ஒட்டி படப்பிடிப்பை மேலும் இரண்டு மாதங்களுக்கு கமல் தள்ளிவைக்கச் சொல்லியிருப்பதால் ஷங்கரும் பட நிறுவனமும் உச்சக்கட்ட வெறுப்புக்கு ஆளாகியிருப்பதாகத் தகவல்.

லைகா நிறுவனத் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு கடந்த ஜனவரி 18ல் துவங்கி சுமார் 10 நாட்கள் வரை மட்டுமே நடந்தது. கமலின் தேர்தல் ஆர்வத்தால் நிறுத்தப்பட்ட நிலையில் மேக் அப் செட்டாகலை உட்பட சில சால்ஜாப்புகள் சொல்லப்பட்டன. இதனால் சென்னையில் போடப்பட்ட செட்கள் பலவும் வீணாகி பெரும்பொருட்செலவு உண்டானது.

அடுத்தும் சிலபல காரணங்களைச் சொல்லி காலம் கடத்திவந்த கமல் தற்போது பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் முழுநேர அரசியல்வாதியாக செயல்பட ஆரம்பித்துவிட்டார். அனைத்து சமூக நிகழ்வுகளுக்கும் அசராமல் அறிக்கை வெளியிடுவது, விருப்ப மனு அளித்தவர்களை நேரம் காலம் பார்க்காமல் நேர்காணல் செய்வது என்று விறுவிறுப்பான அரசியல்வாதியாகிவிட்டார்.

இந்நிலையில் கதாநாயகி காஜல் அகர்வால் உள்ளிட்ட  மற்ற காம்பினேஷன் நடிகர்கள் காத்திருப்பதால் அடுத்த ஷெட்யூலை எப்போது துவங்கலாம் என்று தயாரிப்பாளர் தரப்பு இயக்குநர் ஷங்கரை நெருக்க, ஷங்கர் கமலுக்கு அச்செய்தியை அனுப்பினாராம். தேர்தல் ஏப்ரல் 18ல் முடிவடைவதால் அடுத்த இரண்டு தினங்களில் அதாவது ஏப்ரல் மூன்றாவது வாரத்திலாவது படப்பிடிப்பைத் துவங்கிவிடலாமா என்று கேட்டதற்கு தேர்தல் முடிவுகள் வரும் வரை என்னால் ‘இந்தியன் 2’ வில் சரியாகக் கவனம் செலுத்த முடியாது. எனவே தேர்தல் முடிவுகள் வந்த பிறகு மே இறுதி வாரத்தில் அல்லது ஜூன் முதல் வாரம் முதல் படப்பிடிப்பைத் துவங்கலாம்’ என்பதே கமலின் பதிலாம்.அதாவது கமலின் கால்ஷீட்டை டார்ச் லைட் வைத்துத் தேடவேண்டிய நிலைமை.

ஒருவேளை நிற்கும் நாற்பது தொகுதிகளிலும் நம்மவரே வென்றால் இந்த முடிவிலும் மாற்றம் இருக்கலாம்.