’உலகம் மிரளும் இந்திய சினிமா’ எனும் ஏகபோக பில்ட்-அபு உடன் வெளியான ரஜினிகாந்தின் 2.0 படம் பப்படம் ஆன கதை அதே உலகம் அறிந்ததே. எப்படியோ சதாய்த்திருக்க வேண்டிய இந்தப் படம் இப்படி சறுக்கியதற்கு காரணமே ஷங்கர்தான் என்பது லைக்கா மற்றும் ரஜினி தரப்பின் வருத்தம். ‘பர்ஃபெக்‌ஷன், பர்ஃபெக்‌ஷன் என்று சொல்லி எக்கச்சக்கமாக காலத்தை கடத்தி, யதார்த்த உலகில் தொழில்நுட்ப புரட்சி வளர வளர, இந்தப் படத்தை பற்றிய பிரமிப்பு குறைந்து  கொண்டே போனது. ரிலீஸின் போது அது பணால் ஆகிவிட்டது.’என்று அதற்கு விளக்கமும் கொடுத்தார்கள். 

இந்நிலையில் 2.0 எடுத்த அதே லைக்காதான் கமலை வைத்து ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் -2’ எடுக்கிறது. தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் ஷங்கரிடம் கமல் வைத்த பெரிய வேண்டுகோள், ‘சீக்கிரம் ஷூட்டை முடிச்சுட்டு. என்னை ரிலீவ் பண்ணிடுங்க. நான் பார்லிமெண்ட் எலெக்‌ஷன் வேலையை பார்க்க வேண்டியிருக்குது!’ என்பதுதான். ஏற்கனவே 2.0வில் ஓவராக ஷங்கரிடம் நொந்திருந்ததால் சுபாஷ்கரனும் இதையே வலியுறுத்தினார். 

ஷங்கர் தலையாட்டிவிட, குறுகிய காலத்தில் மிகப் பிரம்மாண்டமான கமல் - ஷங்கர் படம்! எனும் ரீதியில் படம் ப்ரமோட் செய்ய்பபட்டது. இந்தியன் படம் எப்படி லஞ்சம், ஊழலை மையமாக வைத்து கிழித்து எடுத்ததோ அதை இன்னும் வலுவாகவே சீக்வெல் மூவியிலும் வைக்க ஆசைப்பட்டார் ஷங்கர். அரசியலுக்கு வந்துவிட்ட கமலும் ஊழலைத்தான் எதிர்த்து நிற்கிறார். எனவே தேர்தலுக்கு முன் இந்தப் படம் ரிலீஸானால் தனக்கும், தன் கட்சிக்கும் பெரிய அளவில் பூஸ்ட்டாக அமையும், கஷ்டமேயில்லாமல் பெரிய வாக்கு வங்கியை தனக்கு திருப்பிவிடும், குறிப்பாக முதன் முதலில் வாக்களிக்கும் இளைஞர்கள், அரசியலை வெறுக்கும் இளைஞர்கள், நடுத்தர வயதுடையோர் ஆகியோர் அடங்கிய  வாக்கு வங்கியை தன்னை நோக்கி சிந்தாமல் சிதறாமல் இழுத்து வரும்! என்று பெரிதாய் ஆசைப்பட்டிருக்கிறார் கமல். 

அதற்கு ஏற்றார் போலே படத்தின் திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளதாம். இந்தியன் தாத்தா, இந்திய இளைஞர்களை கொண்டு இந்த நாட்டின் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கிறார்! எனும் ரீதியில்தான் கதை இருக்கிறதாம். ஆக கமல் செம்ம ஹேப்பி!

மிக சரியாக  தேர்தலுக்கு முன்பாக இந்தப் படம் வெளியாகி ஹிட்டடிக்கையில், மக்களின் முன்னால் அரசியல்வாதியாக தான் நிற்க வேண்டுமென்பது கமலின் கணக்கு. ஆனால் ஷங்கரின் செய்கைகளோ இதை காலி செய்துவிடும் போல! என்று நோகிறது உலகநாயகன் கட்சி வட்டாரம். 

என்ன பிரச்னை?...தைப் பொங்கல் முடிந்து கடந்த ஜனவரி 18-ம் தேதியன்று இந்தப் படத்துக்கு பூஜை போட்டனர், அதற்கு முன் இந்தியன் தாத்தாவின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டனர். பூஜையன்று தாத்தா கெட் - அப்பிலேயே கமல் வந்து நின்றார் பூஜைக்கு. பொதுவாக தன் புதிய படத்துக்காக தான் மாறியிருக்கும் கெட் - அப்பை ஷூட் முடியும் வரை வெளியே விடாதவர்தான் கமல். ஆனால் இப்போது இந்த கெட் - அப்பில் வந்து நிற்க காரணம், ‘இந்தியன் தாத்தா’ என்றாலே ஊழலுக்கு சிம்மசொப்பனமானவர்! என்பது மக்கள் மனதில் பதிந்துவிட்டது. அதை உறுதிப்படுத்தி மேலும் தூண்டி விடவே இந்த ட்ரிக்கை கையாண்டார் கமல். 

பூஜைக்குப் பின் படம் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் ஒரே வாரத்தில், சென்னையில் ஒரு கல்லூரி விழா நிகழ்வில் வந்து கலந்து கொண்டார் கமல். எல்லோருக்கும் ஆச்சரியம்? ஷூட் என்னாச்சு? என்று.

விசாரிக்கையில்தான் தெரிகிறது...கமலுக்கு போடப்படும் தாத்தா மேக் - அப் பில் ஷங்கருக்கு அவ்வளவு திருப்தி இல்லையாம். அதனால் மேக் - அப் டீமை மாற்றும் முடிவில் இருக்கிறாராம். இதனால் ஷுட்டிங்கில்  நிறுத்தம். 

பொதுவாக இந்த மாதிரி விஷயங்களை கமல் ரசிப்பார். மேக் - அப் சரியில்லை என்று தன் இயக்குநர் ஃபீல் பண்ணினா என்றால் அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்காத குறையாக அவரது பர்ஃபெக்‌ஷனை பாராட்டுவதுதான் கமலின் இதுநாள் வரையிலான குணம். ஆனால் இப்போதோ ஷங்கர் மீது கடுப்பாகிவிட்டாராம். ‘ஏன் என்ன குறை? நல்லாதானே இருக்குது!’ என்று டென்ஷாகிட, ஷங்கருக்கு ஆச்சரியம். ‘கமல் சாரா இது? மேக் - அப்பிலும், டேக் ஓ.கே. பண்ணுவதிலும் சமரசம் ஆகாத அந்த நடிப்பு அரக்கனா இப்படி?’ என்று வாயடைத்துவிட்டாலும் கூட வழிக்கு வரவில்லை. 

இது கமலின் காதுகளுக்கு வர, அவரோ எரிச்சலில் “இவரு என்னை அரசியல் பண்ண விடமாட்டார் போல! இழுக்கக் கூடாதுன்னு சொல்லித்தானே அக்ரீமெண்ட் போட்டோம்! அப்புறமென்ன?” என்று சிவந்த முகம் இன்னும் சிவப்பாக கோபப்படுகிறாராம்.