இந்தியன் 2 படம் சூட்டிங் இடத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தமிழ் சினிமா உலகில் சோகத்தை ஏற்படுத்தியது.சினிமா படப்பிடிப்பு தொழிலாளர்களுக்கு பணியின் போது பாதுகாப்பு இல்லை பாதுகாப்பு அவசியம் என்பதை இயக்குனர்கள் வலியுறுத்திப்பேசினார்கள்.இந்த நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 1கோடி நிதி வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.இந்த திரைப்படத்திற்காக சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19ந்தேதி செட் அமைக்கும் பணிகள் நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விபத்து ஏற்பட்டதில் உதவி இயக்குனர் மது, சங்கரின் இணை இயக்குனர் கிருஷ்ணா, உதவி நடன இயக்குனர் சந்திரன் ஆகிய 3 பேர் பலியானார்கள். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.  தொடர்ந்து, 3 பேரின் உடல்களுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசும் போது..' இந்தியன் - 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து என் குடும்பத்தில் நிகழ்ந்ததாக கருதுகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிருடன் இல்லை.

நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன். 4 நொடிகளுக்கு முன்புவரை நான் அங்குதான் இருந்தேன். இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என கூறினார்.இந்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கியுள்ளனர்.