எல்லா சோதனைகளும் முடிந்து  இன்னும் 4 தினங்களில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளர் மூலம் புதுவிதமான சிக்கலை எதிர்கொண்டு வருகிறது ஷங்கர்,கமல் கூட்டணியின் ‘இந்தியன் 2’படம்.

’96’வெளியான இந்தியனின் தொடர்ச்சியாக 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர்.காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் கடந்த நவம்பரில் தொடங்கி நான்கு நாட்கள் நடந்ததுடன் நிற்கிறது.கமலுடைய ஒப்பனை தொடர்பான விசயங்கள் மற்றும் படத்தின் செலவு, வெளியீட்டுத்தேதி ஆகிய விசயங்களில் படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருந்தது.

இதனால் இந்தப்படம் நடக்காது என்றே நம்பப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் விதமாக இயக்குநர் ஷங்கர் வேறு நாயகர்களை வைத்துப் படமெடுக்க முயல்கிறார் என்கிற செய்திகள் வந்தன.ஆனால் அவற்றையெல்லாம் பொய்யாக்கி மீண்டும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி ’இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருக்கிறதாம். இந்நிலையில் படத்துக்கு அதன் முந்தைய ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் மூலம் ஒரு பிரச்சினை கிளம்பியிருக்கிறது.

இப்படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக இருந்தார். இப்படம் தொடர்ந்து  தாமதமானதால் அவர் விலகிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.எனவே, இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய வருமாறு கே.வி.ஆனந்தை அழைத்தாராம் இயக்குநர் ஷங்கர். கே.வி.ஆனந்த் இயக்கும் ’காப்பான்’ படம் முடிந்துவிட்டதால் அழைத்திருக்கிறார். ஆனால், கே.வி.ஆனந்தும் காரணமே சொல்லாமல்  மறுத்துவிட்டாராம்.படம் தொடங்கியதிலிருந்து பணியாற்றியிருந்தால் சரியாக இருக்கும், இப்போது திடீரென உள் நுழைந்தால் குழப்பமாகிவிடும் என்பதால் அவர் மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இப்போது கடைசி நிமிடத்தில்  ரத்னவேலு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்படக்கூடும் என்று சொல்லப்படுகிறது.