லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’படத்துக்கு துணை நடிகர்கள் தேவை என்ற விளம்பரம் தரப்பட்டுள்ளது இண்டஸ்ட்ரியைச் சேர்ந்த பலருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு ஆறுமாத காலத்திற்கும் மேலாக நின்றிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஆரம்பமாகவுள்ளதை கலல்,ஷங்கர் பட நிறுவனத்தினர் உறுதி செய்துள்ளனர். இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் நடிக்க காஜல் அகர்வால் நாயகியாக இணைந்திருந்தார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கின்றனர். சித்தார்த்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கிறார்.இவர்கள் தவிர நெடுமுடிவேணு, டெல்லி கணேஷ், ஆர்.ஜே.பாலாஜி என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இருப்பினும் துணை கதாபாத்திரங்களில் புதுமுக நடிகர், நடிகைகளை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்திற்கு வழக்கமாகப் போடப்படும்  சினிமா யூனியன்களிலிருந்து  ஜுனியர் ஆர்டிஸ்டுகளை நியமித்தால் அந்த பில்லே பல லட்சங்களைத் தொடும்  என்பதால் படு விபரமாக இப்படி ஒரு விளம்பரத்தை லைகா நிறுவனம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த வழியில் வாய்ப்பு தேடி வருகிறவர்களுக்கு சாப்பாடு தவிர வேறு எதுவும் தரத்தேவையில்லை என்பது கம்பெனியின் கணக்கு. இதுதொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தேர்ந்த நடிகர்கள், விருப்பமான நடிகர்கள் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஆண், பெண் இருபாலரும் தொடர்பு கொள்ளலாம். வயது தடையில்லை ” என்று தெரிவித்துள்ளது. இந்த விளம்பரத்தைக் கண்டு துணை நடிகர்கள் சங்கம் கண்டிப்பாகப் பொங்கி எழும்.பொறுத்திருந்து பார்ப்போம்.