பிகில் பட விவகாரம் தொடர்பாக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், விஜய்யின் வீடுகள், பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சோதனைக்கான காரணம் குறித்து வருமான வரித்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளர், பிரபல நடிகர், அவரின் வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் 05.02.2020 அன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அண்மையில் வெளியாகி ரூ.300 கோடி வசூல் செய்த படம் தொடர்பாகத் தான் சோதனை நடைபெறுவதாக அறிக்கையில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

மொத்தம் 38 இடங்களில் நடைபெற்ற சோதனையில் இதுவரை கணக்கில் வராத ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முக்கிய சொத்து ஆவணங்கள், காசோலைகள், அடமான பத்திரங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்ந்த போது மொத்தம் 300 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு நடத்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

சோதனை நடைபெற்று வரும் பிரபல பைனான்சியர் ஒரு பில்டரும் ஆவார். அவருடைய ரகசிய ஆவணங்கள் அனைத்து நண்பரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ரெய்டில் சிக்கிய தயாரிப்பாளரும், பட தயாரிப்பு, விநியோகம், திரையரங்கம் என பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். எனவே அவரது அலுவலகத்தில் உள்ள ஆவணங்களையும் சோதனை செய்து வருகிறோம். சமீபத்தில் அந்த நிறுவனம் தயாரித்த படத்திற்கான வரவு, செலவு கணக்குகள் விசாரணை நடைபெற்று வருகிறது. 

பிரபல நடிகரை பொறுத்தவரை அசையா சொத்துக்களில் செய்துள்ள முதலீடுகள், சோதனைக்கு ஆளாகியுள்ள தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க வாங்கிய பணம் குறித்து தான் சோதனை நடந்து வருகிறது. சில இடங்களில் சோதனை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்று வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.