நடிகை சமந்தாவின் மாமனார் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலமொன்றை ஆந்திர போலீஸார் நேற்று இரவு கைப்பற்றினார். இச்செய்தி ஆந்திரத் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹைதராபாத்துக்கு அருகே கேசம்பேட் போலீஸ் சரகத்தைச் சேர்ந்த பாப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில் நடிகர் நாகார்ஜுனா, அமலா, நாக சைதன்யா, அவரது மனைவி சமந்தா ஆகியோருக்குச் சொந்தமான 40 ஏக்கரா விவசாய நிலம் உள்ளது. ஆனால் இந்த நிலத்தில் நாகார்ஜுனா குடும்பத்தினர் விவசாயம் எதுவும் செய்யவில்லை. அதனால் அவர்கள் அந்த நிலத்துக்கு அடிக்கடி சென்று வராத நிலையில் அமலா மட்டும் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் ஒருமுறை விசிட் அடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு அருகாமையிலுள்ள விவசாயிகள் நாகார்ஜூனாவின் நிலப்பரப்பிலிருந்து பயங்கர துர்நாற்றம் வீசியதால் உள்ளே சென்று பார்த்தபோது மிகவும் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் இருப்பதைக் கண்டு  போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீஸார் அந்த சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை கேசம்பேட் காவல் நிலைய அதிகாரிகள் நாகார்ஜுனாவின் நிலப்பரப்புக்கு மோப்ப நாயுடன் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.