* தமிழக சட்டசபை தேர்தல் பரபரப்புகள் ஆரம்பமாக இன்னமும் ஓராண்டே இருக்கும் நிலையில், ரஜினி தனது தப்ரார் படத்தோடு முடித்துவிட்டு, கட்சியை துவக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மனிதர் அடுத்து சிறுத்தை சிவா இயக்கிட, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘தலைவன்’ படத்தில் கமிட் ஆனார். இப்போதோ ‘கைதி’ லோகேஷ் கனகராஜை அழைத்து சந்தித்துள்ளார் - அப்ப, கட்சி கதம் கதம் தானா!?

*  பேரன்பு படத்தின் மூலம் உருவாகிய அன்பினால் இயக்குநர் ராமும், மலையாளத்தின் மெகா ஸ்டார் மம்மூட்டியும் அநியாயத்துக்கு அன்பு நண்பர்களாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் மம்மூட்டியின் ‘மாமாங்கம்’ படத்தின் தமிழ் டப்பிங்குக்கான வசனத்தை மம்மூட்டி கேட்டதால் ராம் எழுதிக் கொடுத்திருக்கிறார். வசனம் மிகவும் கஷ்டமாக இருந்ததாம். ஆனாலும் அதை சரியாக உச்சரிக்க சொல்லிப் படுத்தி எடுத்திவிட்டாராம் ராம் - ஓ அங்னமோ மம்மூகா?!

*  டி.இமான் தான் சொன்ன சொல்லை காப்பாற்றிவிட்டார். பார்வை மாற்றுத் திறனாளினான திருமூர்த்திக்கு தான் சொன்னது போலவே ‘சீறு’ படத்தில் ஒரு பாட்டு வழங்கிவிட்டார். இப்பாடலை வெளியிட்டு, ‘அனுதாபத்துக்காக இல்லாமல், இந்தக் குரல் உண்மையிலேயே பிடித்திருந்தால் ஷேர் பண்ணுங்க. மற்ற இசையமைப்பாளர்களும் இவரை பயன்படுத்துங்க.’என்று கேட்டுக் கொண்டுள்ளார் - ஆமென்!
*  தனுஷை வைத்து ‘டாக்டர்ஸ்’ எனும் பெயரில் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு, தலைப்பை பதிவும் செய்து வைத்திருந்தார் அவரது அண்ணன் செல்வராகவன். ஆனால் படம் சில காரணங்களால் டிராப் ஆனது. இந்த நிலையில், இப்போது அதே டைட்டிலை சற்றே மாற்றி, ‘டாக்டர்’ எனும் தலைப்பில் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். யோகிபாபு, வினய் என ஒரு பக்கா டீம் இருக்கிறது படத்தில்தனுஷின் டைட்டிலை பிடித்து, தன் முன்னாள் நண்பருக்கு ஷாக் ஊசி போட்டிருக்கிறார் டாக்டர் எஸ்.கே.