நவம்பர் 7ம் தேதி முதல் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற உள்ள கமல் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் 9ம் தேதி நடைபெறுவதாக இருந்த இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிகழ்ச்சி 17ம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

தனது மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளின் வற்புறுத்தலுக்காக பிறந்தநாள் நிகழ்வுகளை மூன்றுநாள் கொண்டாட்டங்களாக மாற்ற கமல் சம்மதித்துள்ளார். இந்நிகழ்வின் இறுதி நிகழ்ச்சியாக வரும் 9ம் தேதி மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கமலின் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ராஜாவின் இன்னிசைக் கச்சேரி நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் அன்று மாலை சென்னையில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கைகள் தெரிவித்த விபரத்தை கமல் ராஜாவிடம் கூறியிருக்கிறார்.

அச்செய்தியை மிக சந்தோஷமாக ஏற்றுக்கொண்ட ராஜா,’நல்லவேளை ரிகர்சலுக்கு டைம் ரொம்ப கம்மியா இருக்கேன்னு நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன். ஒரு வாரம் தள்ளி வேற நல்ல இடமா பாத்து புக் பண்ணுங்க. உங்களுக்காக நான் பண்ணுற அந்தக் கச்சேரி களை கட்டணும்’என்று உற்சாகமாகப் பதில் அளித்தாராம். உடனே அதே நிகழ்வு நவம்பர் 17ம் தேதி ஞாயிறன்று நேரு உள்விளையாட்டரங்குக்கு மாற்றப்பட்டுள்ளது. தனது பிறந்த நாள் விழா தொடர்பான பரபரப்பான ஷெட்யூல்களுக்கு மத்தியிலும் மகள் ஸ்ருதியுடன் ராஜா இசைக்குழுவினருடனான ரிகர்சல்களில் தவறாமல் கலந்துகொள்கிறார் கமல்.