கமலின் 65 வது பிறந்தநாள் நிகழ்வை ஒட்டி நடக்கவிருக்கும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இலவசமானதாக இருக்கும் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில் அந்நிகழ்ச்சிக்கு ரூ 50 ஆயிரம் வரை டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ‘ராஜா கைய வச்சா அது ராங்காப் போனதில்ல’என்கிற தெனாவெட்டில் கமல் இம்முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

கமலின் மூன்று நாள் பிறந்த தின நிகழ்வுகளை ஒட்டி நாளை நடைபெறுவதாக இருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அடுத்த ஞாயிறன்று நேரு உள் விளையாட்டரங்கில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ராஜாவின் இசைக்குழுவினர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ரிகர்சலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த ரிகர்சலில் கமலும் அவரது மகள் ஸ்ருதியும் தொடர்ந்து கலந்துகொண்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் கமல், எஸ்.பி.பி,மனோ, சித்ரா உள்ளிட்ட முன்னணி பாடகர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

கமலின் பிறந்தநாளை ஒட்டி நடத்தப்படுவதால் இந்நிகழ்ச்சி அநேகமாக இலவசமாக இருக்கும் என்றும் பலரும் நம்பிக்கொண்டிருந்த நிலையில் இன்று புக் மை ஷோ வலைதளத்தில் டிக்கெட் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முறையே பிரான்ஸ், சில்வர், கோல்ட், டயமண்ட், பிளாட்டினம் பிரிவுகளில் ரூ 999ல் துவங்கி 2499, 4999, 14,999, 50,000 என்று டிக்கெட்டுகளின் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.