ilayaraja explanation about notice issue



எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் அனுப்புயயது குறித்து மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என இளையராஜாவின் ஆலோசகர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

இதனால் அதை கொண்டாடும் வகையில், எஸ்.பி.பி பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

அந்த நிகழ்ச்சியில் பல்வேறு இசையமைப்பாளர்கள் பாடிய பாடல்களை அவர் பாடியுள்ளார். இந்நிலையில், முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எப்படி பாடலாம் என்று எஸ்.பி.பிக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து பதிலளித்த எஸ்.பி.பி, எனக்கு சட்ட விதிமுறைகள் குறித்து தெரியாது. இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டியது எனது கடமை. இனி மேடைகளில் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்தவருடம் கனடாவில் தொடங்கி மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் நடத்திய போது எதுவும் சொல்லாத இளையராஜா அமெரிக்காவில் ஏன் இப்படி செய்கிறார் என தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருப்பது கண்டனத்திற்கு உரியது என தெரிவித்தார்.

இந்நிலையில், இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

பாடல்களை அனுமதியுடன் பயன்படுத்தி ராயல்டி செலுத்த வேண்டும் என இளையராஜா கூறியிருந்தார்.

அனுமதி பெற்று பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

சாதாரண மேடை கச்சேரி நடத்துவோர் ராயல்டி செலுத்தவேண்டும் என கட்டயபடுத்தவில்லை.

வணிக ரீதியில் பணம் சம்பாதிப்பவர்கள் மட்டுமே ராயல்டியை செலுத்த வேண்டும் என கோருகிறோம்.

நோட்டீஸ் அனுப்பபடுவது வழக்கமான நடைமுறைதான்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.