நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான்தான் ராஜா என்று நிரூபிக்கும் விதமாக, தான் இதுவரை இசையமைத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இடம்பெற்றிருக்கும் 6000க்கும் மேற்பட்ட பாடல்களின் காப்புரிமையை ஏழ்மையில் வாடும் சினிமா இசைக் கலைஞர்கள் சங்கத்துக்கு தாரை வார்த்தார் இசைஞானி இளையராஜா.

தனது பாடல்களைப் பாடுபவர்கள் ராயல்டி தரவேண்டும் என்ற அவரது நியாயமான கோரிக்கைகளின் அடிப்படை அம்சங்களைக் கூட புரிந்துகொள்ளாமல் சில தினங்களாக வலைதளங்களில் ராஜாவை சில ஞான சூன்யங்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தனது இசைச் சொத்துக்கள் அனைத்தையும் நலிவுற்று வாழும் கலைஞர்களுக்கு எழுதிக்கொடுத்தார் ராஜா.

இதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்ட சினிமா கலைஞர்கள் சங்கம்,...காப்புரிமை என்பது பாடலை எழுதியவர், அதை வெளியிட்டவர் முக்கியமாக அதை இசையமைத்தவருக்கே உரியதாகும். அந்த உரிமையை நமது சங்கத்திற்கு எழுதிக்கொடுத்து புரட்சி செய்திருக்கிறார் இளையராஜா. தனது ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களின் 6000க்கும் மேற்பட்ட பாடல்களை காக்கும் பணியையும், நெறிப்படுத்தும் பணியையும் நமக்கே அளித்துள்ளார்.

ராஜாவின் இந்தப் பாடல்கள் மூலம் வரும் தொகை நம் சங்கத்தின் ஏழைக் கலைஞர்களின் சேமநல நிதிக்கும், கருணை அடிப்படையில் செய்யவேண்டிய உதவிகளுக்கும் பயன்படுத்தப்படும். இத்தோடு நில்லாமல் நமது சங்கத்தின் வளர்ச்சிக்கு மேலும் உதவும்பொருட்டு ஒரு இசை நிகழ்ச்சி நடத்தித்தரவும் ராஜா முன்வந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.