இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற வைரமுத்து எடுத்த  கடைசி முயற்சியும் படுதோல்வியில் முடிந்துள்ளது. ‘மாமனிதன்’படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து இசையமைக்க ஒப்புக்கொண்ட ராஜாவிடம் ஒரே ஒரு பாடல் எழுத வைரமுத்துவுக்கு வாய்ப்பு தாருங்கள்’என்று இயக்குநர் வைத்த கோரிக்கையை இடது கையால் நிராகரித்தார் ராஜா.

’கூடல் நகர்’படத்தில் இயக்குநராக அறிமுகமாகி இதுவரை ஏழு படங்களை இயக்கியுள்ள சீனு ராமசாமி கவிஞர் வைரமுத்துவின் தீவிர விசுவாசிகளுல் ஒருவர். ஏற்கனவே யுவன் ஷங்கர் ராஜா இசையில் வைரமுத்துவை பாடல்கள் எழுத வைத்த அவரிடம் கவிப்பேரரசு எப்படியாவது என்னை மறுபடியும் இளையராஜா இசையில் பாடல் எழுத வைத்துவிடு என்று குறுக்கு வழிக் கோரிக்கை ஒன்று வைத்ததாகத் தெரிகிறது. இதற்காகக் கொஞ்சம் கிரிமினலாக யோசித்த சீனு ராமசாமி, தான் நீண்ட நாட்களாக இயக்கிவரும் ‘மாமனிதன்’படத்துக்கு யுவனுடன் சேர்ந்து ராஜாவும் இசையமைக்கப்போவதாக செய்திகள் பரப்பி அதற்கு யுவன் மூலம் ஒருவழியாக ராஜாவிடம் சம்மதம் பெற்றுவிட்டார்.

அடுத்த நகர்வாக மெல்ல வைரமுத்துவுக்காக ராஜாவிடம் வேண்டுகோள் வைக்க ஆரம்பித்தவுடன் ‘இது மாதிரி என்கிட்ட பேசுறதா படத்தைத் தூக்கிட்டு ஓடிப்போயிடுங்க’என்று ராஜா கொதிக்க, தலை தெறிக்க ஓட்டம்பிடித்த சீனு பிரசாத் ஸ்டுடியோ பக்கமே போகாமல் தனது அசோஸியேட்கள் மூலம், ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளுக்குப் பாடலை வாங்கியிருக்கிறார். இதுவரை எல்லாப்பாடல்களையும் வைரத்துக்கே வழங்கி வந்த சீனுவால் இப்படத்தில் ஒரு பாடலைக் கூட வாங்கிக்கொடுக்க முடியவில்லை என்பது போக வைரமுத்து மீதான ராஜாவின் கோபம் இந்த ஜென்மம் முழுமைக்கானது என்பதைப் புரிந்துகொண்டாராம். தற்போது படத்துக்கான பாடல்களை பழனிபாரதி எழுத ஒரே ஒரு பாடலை பா.விஜய் எழுதியிருக்கிறார்.

தனது முயற்சி தோல்வி அடைந்ததை வெளியே சொல்ல முடியாத நிலையில்,...பாடல் காட்சிகளுடன் கூடிய முழு நீளத்திரைப்படத்தை காட்டினேன். பார்த்த பின்பு அவருக்கும் எனக்கும்  உரையாடல் நிகழவில்லை. ஒரு நாளில் #மாமனிதன் படத்தின் பாடல்கள் இனிதே பிறந்தது. திரு.இளையராஜா அவர்ளுக்கும் அவரின் இசைஞானத்திற்கும் காட்சிகளின் கரங்களால் எமது நன்றிகள்...என்று ட்விட் செய்துள்ளார் சீனு.