என்னைப்பொறுத்தவரை என் வாழ்வின் இனிமையான தருணங்கள் என்பவை ராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த, கேட்டுக்கொண்டிருக்கும் தருணங்கள்தான்.இது சங்கீதம் அறிந்த அறியாத தமிழர்கள் சகலருக்கும் பொருந்தும் என்பதே என் கருத்து.
முன் குறிப்பு; ராஜாவின் 75 வது பிறந்தநாள் கொண்டாடத்துக்கு புதிய பதிவு ஒன்று எழுத முடியாத அளவுக்கு சுண்டு விரலில் பலத்த அடிபட்டிருக்கிறது. மார்ச் 13, 2012ம் ஆண்டு எழுதப்பட்ட பதிவின் மீள் இது...
எட்டு ஆண்டுகளாக செல்போனில் ஒரே ரிங் டோனை வைத்திருப்பவனை சரியான பைத்தியக்காரன் என்றே நீங்கள் அழைக்க விரும்புவீர்கள்,எனில் என்னையும் அப்படியே அழையுங்கள்.
2003-ன் இறுதியில் ‘பிதாமகன்’ ரிலீஸாகி சில தினங்களே ஆன நிலையில், நானும் பாலாவும், காரில் அமர்ந்து பீர் குடித்த படியே, ஏற்காடு மலையேறிக்கொண்டிருந்த போதுதான், முதன்முதலாக, ‘விருமாண்டி சண்டியரை நோக்கி ,சங்கீதத்தின் ஒரே சண்டியர் ராஜா சொன்ன ’உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல’ பாடலைக்கேட்டு கிறங்கினேன்., மலையிலிருந்து இறங்கின உடனே என் செல்போனின் ரிங்டோனாக அன்று அரியனை ஏறிய பாட்டு இன்று வரை இறங்கவில்லை.
சலங்கை ஒலி’ இது மவுனமான நேரம்...,‘நாயகன்’ நீ ஒரு காதல் சங்கீதம்...,’ புன்னகை மன்னன்’ ‘என்ன சத்தம் இந்த நேரம்?..., மவுனராகம்’ நிலாவே வா...,காத்திருக்க நேரமில்லை’ வா காத்திருக்க நேரமில்லை..., நாடோடித்தென்றல்’ ஒரு கணம் ஒரு யுகமாக..., சிப்பிக்குள் முத்து’ மனசுமயங்கும்..., சத்யா’ வளையோசை கலகலவென..... வரிசையில் நான் அந்தப்பாடலை இதுவரை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன். பாடலில் கமலுடன் நாட்டுப்புறத்தமிழில் கொஞ்சியிருந்த ஷ்ரேயா கோஷலுக்கு எனது இதயத்தின் இடது ஓரத்தில் சின்னதாக ஒரு கோயில் கூட கட்டியிருந்தேன்.’என்னவிட உன்ன சரிவரப்புரிஞ்சிக்க யாருமில்ல ...’ என்று ஷ்ரேயா எனக்காகப்பாடுவதாக நினைத்துக்கொள்வது சொல்லவொண்ணா சுகமாக இருக்கிறது.
தமிழ் நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல்களைக் கேட்டு வளர்ந்திருந்தாலும், சின்ன வயசிலிருந்தே ராஜாவின் மீது வெறிகொண்ட ரசிகன் நான். அவருக்கு என்னைபோல் லட்சக்கணக்கில் பைத்தியங்கள் உண்டென்றாலும், ராஜா பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான் என்ற தலைமைப்பொறுப்பை என்னிடம் தயவு செய்து விட்டு விடுங்கள் . அப்படி விட்டுக்கொடுக்க நீங்கள் முன்வரும் பட்சத்தில் என் வாழ்நாள் முழுக்க,எம்.எல்.ஏ, மந்திரி, முதல் அமைச்சர், பிரதமர், அமெரிக்க பிரதமர் போன்ற எந்தப்பதவிகளுக்கும் நான் உங்களொடு போட்டியிட மாட்டேன் என்று எத்தனை ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் வேண்டுமானாலும் எழுதி கையெழுத்திடுகிறேன்.
வைரமுத்துவை எனக்குப் பிடிக்கும் அவர் இளையராஜாவுடன் இருந்தவரை. பாரதிராஜாவை* எனக்குப் பிடிக்கும் அவர் படத்துக்கு ராஜா இசையமைக்கும்போது மட்டும். ‘நீ தானே என் பொன் வசந்தம்’ படம் ,ஏ.ஆர். ரகுமான்,மற்றும் ஹாரிஸ்ஜெயராஜிடமிருந்து எங்கள் ராஜா கைக்கு மாறும்போது, ‘படம் பிரமாதமா வந்துருக்காம்’ என்று சல்லி பைசா அட்வான்ஸ் வாங்காமல் மிஸ்டர் திகில் முருகன் பார்க்க வேண்டிய பி.ஆர்.ஓ. வேலையை நான் பார்க்க ஆரம்பித்துவிடுகிறேன்.
என்னைப்பொறுத்தவரை என் வாழ்வின் இனிமையான தருணங்கள் என்பவை ராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த, கேட்டுக்கொண்டிருக்கும் தருணங்கள்தான்.இது சங்கீதம் அறிந்த அறியாத தமிழர்கள் சகலருக்கும் பொருந்தும் என்பதே என் கருத்து.
மிகவும் வறுமையான பின்னணியில் எட்டுப் பிள்ளைகளைப்பெற்று வளர்க்க, நாள்தோறும் நள்ளிரவில் தோட்டம் போய் தண்ணீர்பாய்ச்சிய என் தாய் லச்சம்மாளின் நினைவு வரும்போதெல்லாம் ‘பொன்னப்போல ஆத்தா என்னப்பெத்துப்போட்டா’ [என்னை விட்டுப்போகாதே ]பாட்டு கேட்டு அழுதிருக்கிறேன்.மனசு சரியில்லாத வேளைகளில், ‘நான் யாரு எனக்கேதும் தெரியலையே, ஆலோலம் பாடி ‘ மாதிரி பாடல்கள் கொண்டு என் கண்ணீர் துடைப்பது ராஜாவின் சுரங்கள்.ஒரு பூ மலர்வதைக்கூட சங்கீதமாகச் சொல்ல முடியும் என்று மலர்ந்த ‘வெள்ளி முளைத்தது’ [கீதவழிபாடு] கேட்டு விடிந்தது எத்தனை காலைப்பொழுதுகள் என்று சொல்லிமாளாது.
அமெரிக்கன் கல்லூரியில்* படித்துக்கொண்டிருந்தபோது, நானும் எனது நண்பர்களும். வகுப்பறைகளில் இருந்ததை விட ,கல்லூரிக்கு எதிரே இருந்த கணேஷ் டீ ஸ்டாலில் தான் அதிகம் நின்றிருப்போம்.
‘மண்வாசனை, கரையெல்லாம் செண்பகப்பூ’ நான் பாடும் பாடல், பயணங்கள் முடிவதில்லை,இளமைக்காலங்கள்’ என்று கேட்டு எங்களைத்திகைக்க வைப்பதையே ராஜா சலிப்பின்றி செய்து வந்தார்.கணேஷ் ஸ்டாலில் டீ கேட்பதுவும், ராஜாவின் பாட்டீ குடிப்பதுமே கல்லூரி காலங்களில் எங்களது முக்கியமான பணியாக இருந்தது.
ராஜாவை நான் முதன் முதலில் தனிப்பட்ட முறையில் சந்தித்தது, ஏ.வி.எம்.ஸ்டுடியோவில், ‘அதர்மம்’ பட பூஜை தினத்தன்று.
எனது அமெரிக்கன் கல்லூரி வகுப்புத்தோழன் ரமேஷ் என்கிற ரமேஷ்கிருஷ்ணன்*, அடையாறு திரைப்படக்கல்லூரியில் டைரக்ஷன் கோர்ஸ் முடித்து, அங்கேயே ஆக்டிங் கோர்ஸ் முடித்த சுரேஷ் என்பவரை தயாரிப்பாளராக அமைத்து தனது’அதர்ம ஆட்டத்தை ஆரம்பித்திருந்தான். பட நிறுவனத்தின் பெயர் ஜி.கே.ஃபிலிம்ஸ்.தயாரிப்பாளர்கள் அண்ணன் தம்பி மூன்று பேர்.ரமேஷ் மூத்தவர், சுரேஷ் நடுவர். சதீஷ் கடைக்குட்டி.
ரமேஷ் கிருஷ்ணனுடன் சேர்ந்து சந்தித்த நாலைந்து சந்திப்புகளிலேயே நான் தயாரிப்பாள சகோதரர்களிடம் மிகவும் நெருக்கமாகிவிட்டேன்.
இந்த சமயத்தில் நான் ஆசிரியராகவும், பார்ட்னராகவும் இருந்த ‘சத்ரியன்’* அரசியல் பத்திரிகை தனது இறுதி மூச்சை நெருங்கிக்கொண்டிருந்ததால், நான் எனது பெரும்பாலான நேரங்களை டிஸ்கஷன் ,சீட்டு விளையாடுவது என்று ‘அதர்ம’ கோஷ்டிகளுடனேயே கழிக்க ஆரம்பித்திருந்தேன்.
நன்றாக நினைவிருக்கிறது. அன்று அதிகாலை.ஏ.வி.எம்மில் லேசான தூறலடித்துக்கொண்டிருக்க பூஜைக்கு சரியான நேரத்தில் ராஜா இறங்கிவர, நான் தெய்வ தரிசனம் கிடைத்ததுபோல் சிலிர்த்து நின்றேன்.
முதல்நாளே கொஞ்சம் மன ரீதியாக, ரமேஷ் உட்பட்ட டீமை நான் தயார் படுத்தியிருந்த வகையில்,ரமேஷ்கிருஷ்ணன் உட்பட படத்தில் பணியாற்ற இருந்த அத்தனை டி.எஃப்.டி.மாணவர்களும் தாங்கள் போட்டிருந்த முரட்டு ஜீன்ஸ் பேண்டையும் பொருட்படுத்தாது, பட்பட் என்று ராஜா காலில் விழுந்து நமஸ்காரம் வைத்தவுடன்’ இந்தப்படம் கண்டிப்பா நல்லா ஓடும் என்று என் மனசுக்குப் பட்டது.
அன்று மதியமே மனோ குரலில் ‘தென்றல் காற்றே ஒன்றாய்ப் போவோமா?’ என்ற பாடலையும்,அடுத்த இரு தினங்களில் மேலும் 4 பாடல்களையும் முடித்துத்தந்த ராஜாவின் ஒவ்வொரு அசைவையும் ரமேஷை விட்டு நகராமல் கவனித்துக்கொண்டே இருந்தேன். படம் பின்னணி இசைக்குப்போனபோது,திரைக்குள் நுழைந்துகொண்ட மந்திரவாதி போலவே எனக்குத்தெரிந்தார்.
அவருள் இருக்கிற இசை என்ற ஒன்றை எடுத்து விட்டால்,ராஜா என்பவர் இருந்துகொண்டிருக்கும் இடம் வெற்றிடமாய் மாறிவிடுமோ என்று எண்ணுமளவுக்கு முழுக்க முழுக்க இசையாகமட்டுமே அவர் இருந்தார், தெரிந்தார்.
அதற்கு அப்புறம் ‘சேது’ பிதாமகன்’ சமயங்களில் பாலாவுடன் , இளையஞானி கார்த்திக்ராஜா தனக்கு மேனேஜராக இருக்கச்சொல்லி வீட்டுக்கு அழைத்தபோது என்று பலமுறை மிக நெருக்கமாக ராஜாவை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் இதுவரை ஒரு வார்த்தை கூட நான் பேச நினைத்ததில்லை.
பக்தனுக்கு தெய்வத்தோடு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு?
