தனது 76 வது பிறந்தநாள் பரிசாக தென்னிந்திய திரையிசைக் கலைஞர்கள் சங்கத்துக்கு தனது சொந்தச் செலவில் கட்டிடம் கட்டித்தருவதாக அறிவித்து இசைக்கு மட்டுமல்ல பெருந்தன்மைக்கும் நானே ராஜா என்று நிரூபித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.

தனது பிறந்தநாளையொட்டி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் தனது ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா சற்றும் சிரமம் பாராமல் தன்னைச் சந்திக்க வந்த அத்தனை ரசிகர்களுடனும் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. எனது பிறந்தநாள் அன்று இசை நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று மாலை நடக்க இருக்கும் இசை நிகழ்ச்சியில் முக்கியமான அறிவிப்பு காத்திருக்கிறது. என்ன அறிவிப்பு என்பது மாலை தெரியவரும்” என்றார்.

தென்னிந்தியத் திரையிசைக் கலைஞர்கள் சங்கத்துக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியாக இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் மாபெரும் இசை கச்சேரி நடைபெற்றது. கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இளையராஜாவும் ஒரே மேடையில் ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்தனர். மேடை நிகழ்ச்சிகளில் சமீப காலங்களில் அதிகம் கலந்துகொள்ளாத கே.ஜே.ஜேசுதாஸும் நிகழ்ச்சியில் பங்கெடுக்க இருவரும் இணைந்து ‘தளபதி’படத்தின் ’காட்டுக்குயிலு மனசுக்குள்ள’பாடலைப் பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

கே.ஜே.ஜேசுதாஸ், மனோ, பாம்பே ஜெயஸ்ரீ, உஷா உதுப், பவதாரணி உள்ளிட்டோருடன் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், தேவி ஸ்ரீ பிரசாத், ஸ்ரீகாந்த் தேவா, விவேக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின்போது பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட இளையராஜா, இசைக் கலைஞர்களுக்கான கட்டடத்தைக் கட்டும் முழுப் பொறுப்பையும் தானே ஏற்பதாக அறிவித்தார். ராஜாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து எழுந்த கரகோஷம் அடங்க வெகுநேரமானது.