Ilaiyaraaja : நான் உன்னை நீங்க மாட்டேன்... மீண்டும் சர்ச்சையை கிளப்பிய இளையராஜா
Ilaiyaraaja : ‘மோடியும் அம்பேத்கரும்’ என்கிற புத்தகத்தில் இளையராஜா எழுதிய முன்னுரை சர்ச்சையை கிளப்பியதோடு, சமூக வலைதளங்களிலும் பேசு பொருள் ஆனது.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா, சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘மோடியும் அம்பேத்கரும்’ என்கிற புத்தகத்தில் முன்னுரை எழுதி இருந்தார். இதில் அம்பேத்கர் மட்டும் தற்போது இருந்திருந்தால் மோடியின் ஆட்சியை கண்டு பெருமைப்பட்டிருப்பார் என்றும் மோடி அம்பேத்கருக்கு இணையானவர் எனவும் புகழ்ந்திருந்தார். இளையராஜாவின் இந்த முன்னுரை சர்ச்சையை கிளப்பியதோடு, சமூக வலைதளங்களிலும் பேசு பொருள் ஆனது.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. அவர் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற எதிர்ப்பு குரல்களும் எழுந்தன. ஆனால் இளையராஜாவோ மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என தடாலடியாக அறிவித்தார். இதையடுத்து இளையராஜாவை விமர்சிக்க வேண்டாம் என சில அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த இந்த விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில், தற்போது இளையராஜா போட்டுள்ள டுவிட் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதில் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதி படத்தில் இடம்பெறும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்கிற பாடலில் வரும் ‘நான் உன்னை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்’ என்ற வரிகளை தன் சொந்த குரலில் பாடி பதிவிட்டுள்ளார்.
அந்த பாடலின் அசல் வரிகளில் சில மாற்றங்களை செய்துள்ள இளையராஜா, ‘பாடுவேன் உனக்காகவே... இந்த நாள் நன்னாள் என்று பாடு... என்னதான் இன்னும் உண்டு கூறு' என பாடியுள்ளார். இளையராஜாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி உள்ளது. அவரின் இந்த டுவிட்டுக்கு நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ரூ.6 கோடி சம்பளத்துடன் வீடு தேடி வந்த விளம்பர பட வாய்ப்பு... ‘நோ’ சொல்லி திருப்பி அனுப்பிய அல்லு அர்ஜுன்