I will not accept sexual harassment for women in cinema - Andrea opentak ...

சினிமா வாய்ப்பு கிடைக்க பெண்கள் பாலியல் தொல்லைகளை சந்திப்பதாக கூறுவதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்று நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சிறந்த பின்னணிப் பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா சினிமாவில் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் குறித்து பல தகவல்களை ஓபனாக பகிர்ந்துள்ளார். அது பின்வருமாறு:

"சினிமா வாய்ப்பு கிடைக்க பெண்கள் பாலியல் தொல்லைகளை சந்திப்பதாகவும், சினிமாவில் பெண்களுக்கு பல தொல்லைகள் இருப்பதாகவும் கூறப்படுவதை நான் ஒரு போதும் ஏற்கமாட்டேன்.

பெண்களுக்கு திறமையும், கடின உழைப்பும் இருந்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும். சிலர் சினிமா வாய்ப்பிற்காக கடினமான சூழ்நிலையிலும், தவறான முடிவுகள் எடுக்கலாம். அதற்காக எல்லோரையும் குற்றம் சாட்டக்கூடாது.

சினிமா வாய்ப்பு கிடைக்கும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். இதில், பொறுமையில்லாதவர்கள்தான் தடம் மாறுகிறார்கள். ஆனால், எல்லோரும் அப்படி இருப்பதில்லை.

இவ்வளவு ஏன் சுசி லீக்கில் எனது புகைப்படங்கள் வெளியானது. ஆனால், அது உண்மையில்லை. சினிமாவில் பிரபலமானவர்களின் பெயரையும், புகழையும் கெடுக்க ஒரு கூட்டமே காத்துக்கொண்டு இருக்கிறது.

சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் அது போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் அப்படி தவறு செய்யாத போது எதற்கும் கவலைப் பட தேவையில்லை. அப்படியே தவறு செய்திருந்தாலும், அதனை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் என்னிடம் இருக்கிறது.

ஆண்களைப் போன்று பெண்களும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் வந்துவிட்டது. எனக்கு தெரிந்த பெண் ஒருவர் வீட்டு வேலைகள் செய்து மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கிறாள். கணவன் குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்தியதால், அவனை விட்டு பிரிந்து தனது குழந்தையை நன்றாக படிக்க வைக்கிறாள். ஆண் துணை இல்லாமல் பெண்களால் வாழ முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

மது அருந்துவது ஆண்களின் உரிமை என்றால், பெண்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது. இதற்காக மதுவுக்கு வக்காலத்து வாங்குவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். அது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது" என்று அவர் தெரிவித்துள்ளார்.