இயக்குனர் சங்கர் தன்னை நடிக்க அழைத்தார் என்று தனியார் தொலைக்காட்சியில் டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி வழங்கும் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

சினிமாவில் எந்தப்படம் முதலிடத்தில் இருக்கிறது, இந்த வாரத்திற்கான புதுவரவு எது என்ற டாப் 10 மூவிஸ் ஷோவை தொடக்கம் முதல் இன்று வரை அசராமல் தொகுத்து வழங்கி வருகிறார் சுரேஷ்குமார்.

தனது மீடியா வாழ்க்கைக் குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், “எனக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகம். 1990-ஆம் ஆண்டு இருந்த தூர்தர்ஷன் சேனலில் ஷோபனா ரவி, வரதராஜன் ஆகியோர் செய்தி வாசிக்கிறதைப் பார்த்து எனக்கும் அதன் மீது ஆர்வம் வந்தது. ஆனால், வாய்ப்பு மட்டும் வரவில்லை.

அதன் பிறகு 4 ஆண்டுகளுக்குப் பிறகு 1994-ல் மெட்ரோ சேனல் வந்த பின், செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளர்களுக்கு காலிப்பணியிடங்கள் இருந்தது. அதற்கு நான் விண்ணப்பித்தேன். சில மாதங்கள் கழித்து தூர்தர்ஷனில் இருந்து வந்த இண்டர்வியூவில் தேர்வாகி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் அறிவிப்பாளராக இருந்தேன். அப்போது பச்சைக் கலர் சட்டை போட்டு நேரலையில் வணக்கம், சென்னை தொலைக்காட்சி நிலையம் மாநகர அலைவரிசையில் நண்பகல் ஒளிபரப்பு ஆரம்பமாகிறது’னு பேசினேன்.

அதன் பிறகு செய்தி வாசிப்பாளருக்கு நடந்த தேர்வில் தேர்வு செய்யப்பட்டேன். அங்கிருப்பவர்களுடன் சேர்ந்து பழகி அவர்கள் மூலமாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் சேர்ந்து செய்தி வாசித்தேன்.

அப்படியே போய்க்கொண்டிருக்கும் போது டாப் 10 மூவிஸ் பண்ணச் சொன்னாங்க. அன்று முதல் இன்று வரை நான் அப்படியே செய்து கொண்டிருக்கிறேன்.

பொதுவாக டிவியில் அறிமுகமாகிவிட்டால், அவர்களுக்கு சினிமா வாய்ப்பு கண்டிப்பாக தேடி வரும். எனக்கும் அது போன்ற வாய்ப்பு இயக்குனர் சங்கர் மூலமாக வந்தது.

நான் அவரைப் பேட்டி எடுக்கும்போது என்னிடம் என்ன சார் அடுத்த பிராஜெக்ட் பண்ணலாமே. ஆர்வம் இருந்தா சொல்லுங்க என்றார். ஆனால், எனக்கு டைரக்ஷன் தான் ஆர்வம். அதனால், உங்களோடு சேர்ந்து வேலை செய்கிறேன் என்றேன். ஆனால், அதுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

டிவில நான் சொல்ற மாதிரி ஷெட்யூல் போடுறாங்க ஆனால், சினிமாவில் அப்படி இருக்காது. செய்தி வாசிப்பது, பேராசிரியர், டாப் 10 மூவிஸ் இது எல்லாமே எனக்கு ஒரே நேர்கோட்டில் இருக்கிறது. ஆனால், சினிமா அப்படி இருக்காது” என்று தெரிவித்தார்.