எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் அமெரிக்கா செல்லும் முன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இயக்குநரும் நடிகருமான டி,. ராஜேந்தர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு இருப்பதால் அமெரிக்காவில் சிகிச்சைக்கு அழைத்து செல்ல இருப்பதாக டி, ராஜேந்தரின் மகனும் நடிகருமான சிம்பு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று மாலை டி. ராஜேந்தர் அமெரிக்காவுக்குப் புறப்பட்டு சென்றார். அதற்காக சென்னை விமான நிலையத்துக்கு டி. ராஜேந்தர் வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மருத்துவமனையில் இருந்த இந்த இடைப்பட்ட நாளில் என்னைப் பற்றியும் என் மகன் சம்பந்தப்பட்ட செய்திகளையும் வெளியிட்ட ஊடகங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

நான் தற்போது இந்த நிலையில் நிற்கிறேன் என்றால், அதற்கு காரணம் எல்லாம் வல்ல இறைவன்தான். என்னுடைய தன்னம்பிக்கையை மீறிய எனது கடவுள் நம்பிக்கைதான் காரணம். எனக்கு பல காலகட்டத்தில் ஊடகங்கள் கைகொடுத்திருக்கிறீர்கள். நான் இப்போதுதான் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நான் எதையுமே மறைத்தவனே கிடையாது. இப்போதுதான் விமான நிலையமே வந்துள்ளேன், அதற்குள் அமெரிக்கா சென்றுவிட்டதாக தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். நான் ஒரு சாதரணமன ஒரு நடிகன், கலைஞன், லட்சிய திமுக என்ற சிறிய கட்சியை நடத்தக்கூடிய சாதாரண ஒரு ஆள் நான்.

ஆனால், என் மீது பாசம் வைத்து, ஆதரவு காட்டி, பரிவோடு நன்றாக இருக்க வேண்டும் என்று பலரும் பிரார்த்தனைகள், ஆராதனைகள் செய்தார்கள். அதனால்தான் நான் இன்று இங்கு நிற்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த என்னுடைய கட்சித் தொண்டர்கள், அபிமானிகள், என்னுடைய ரசிகர்கள், என்னுடைய மகன் சிம்புவின் ரசிகர்கள், திரையுலக நண்பர்கள், போனில் என்னை தொடர்பு கொண்டு விசாரித்தவர்கள், தமாக தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போன்றோர் இன்று என்னை சந்தித்துவிட்டுச் சென்றார்கள், இந்த நேரத்தில் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவிக்கிறேன்” என்று டி. ராஜேந்தர் தெரிவித்தார்.
