32 வயதான சிந்துஜா ராஜாராம், சவுண்ட் இஞ்சினியர்,புகைப்படக்கலைஞர்,  மற்றும் பாடகியாக இசைத் துறையில் செயல்பட்டுவருகிறார். அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்துவருகிறார். சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் சிந்துஜாவின் குற்றச்சாட்டுகளை ஏற்கெனவே வெளியிட்டார். இந்நிலையில் மிகச்சுருக்கமாக வைரமுத்து தனக்கு கொடுத்த செக்ஸ் தொல்லைகளை பேசி வந்த சிந்துஜா, மீடியா தன் செய்தி மீது காட்டிய ஆர்வத்தால் விரிவாக வைரத்தை வெளுக்க ஆரம்பித்துவிட்டார்.

தமிழ்த் திரையுலகில் எப்போது பணியாற்றினீர்கள். உங்களது பணி என்ன?

2002ஆம் ஆண்டு எனது 16ஆவது வயதில் நான் தமிழ்த் திரையுலகில் இணைந்தேன். சவுண்ட் இஞ்சினியராகப் பணியாற்றினேன்.

எப்போது வைரமுத்துவைச் சந்தித்தீர்கள். அவருடன் உங்களுக்கு நேர்ந்த அனுபவம் என்ன?

அப்போது எனக்கு வயது 18. நான் காஸ்மிக் ஸ்டுடியோவில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். என் அப்பா பெங்களூருக்கு பணிமாற்றலானார். எனது அம்மா எனக்காக நல்ல விடுதியைப் பார்த்துவந்தார். பெரும்பாலான விடுதிகள் இரவு 8.30, 9 மணிக்குள் மூடப்பட்டுவிடும். அப்போது கோடம்பாக்கத்தில் வைரமுத்துவுக்குச் சொந்தமான விடுதி இருப்பது குறித்து செய்தித்தாள்கள் மூலமாக அறிந்தார். அதுவும் இதே போன்று விரைவாக மூடப்பட்டுவிடும். ஆனால் வைரமுத்துவிடம் கூறினால் எனது பணியின் நிலை குறித்து அவர் புரிந்துகொள்வார் என்று என் அம்மா நினைத்தார். விடுதி மூலம் வைரமுத்துவைப் போனில் தொடர்புகொண்டார். என்னைப் பற்றியும் எனது பணி குறித்தும் நீண்ட நேரம் பேசியுள்ளார்.

என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறியதால் நான் எனது பெற்றோருடன் கோடம்பாக்கத்தில் அவரது வீட்டிற்கு மேல் உள்ள அலுவலகத்தில் அவரைச் சந்தித்தேன். “உங்கள் பேச்சில் நீண்ட நாள் நட்பு தெரிந்தது” என்று என் அம்மாவின் போன் உரையாடலைக் குறிப்பிட்டு கூறினார். நான் இசையமைத்த சிடிகளை எடுத்துச்சென்றிருந்தேன். அவருக்கு மிகவும் பிடித்ததாகக் கூறினார். ஏ.ஆர்.ரஹ்மானிடம் காட்டுவதாக கூறினார். 20 முதல் 30 நிமிடங்கள் வரை அந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது எனது மொபைல் எண்ணையும் வாங்கிக்கொண்டார்.

அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ விடுதியில் எனக்காக நேர மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஒருவேளை விடுதியில் தங்கியுள்ள மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம். எனவே எங்களது குடும்ப நண்பரின் வீட்டில் நான் தங்கிவிட்டேன். ஒரு வாரத்தில் எனது பெற்றோர் பெங்களூர் சென்ற பின்பு வைரமுத்துவிடமிருந்து அழைப்பு வந்தது. ரஹ்மான் அலுவலகத்துக்கு மாலை வருமாறு கூறினார். எனக்கு ஆச்சரியமாகவும் சிறிது படபடப்பாகவும் இருந்தது. எனது பாதுகாவலரான அத்தையுடன் அங்கு சென்றேன். ரஹ்மானுடன் ஒரு சிறிய சந்திப்பு அப்போது நடைபெற்றது. சில வாரங்கள் கழித்து தொடர்ச்சியாக என்னைப் போனில் அழைத்தார். எனது பணி குறித்துக் கேட்பார். சந்திக்கலாமா என்றார். நானும் கண்டிப்பாக என்று பதிலளித்தேன்.

அடுத்தடுத்த அவரது அழைப்புகள் நம்பிக்கை இழக்கச்செய்தன. நான் அவருக்கு அளிக்கும் மரியாதை குறையாமல் பதிலளித்தேன். ஒரு சமயம் அவர், “நாம் எப்போது சந்திக்கலாம். நான் உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். உன்னைப் பற்றி கவிதைகள் எழுதியுள்ளேன். தயவு செய்து பெசண்ட் நகர் அலுவலகத்துக்கு வா” என்றார். நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். அடுத்த அழைப்பு இன்னும் அதிர்ச்சிகரமாக இருந்தது. அவர் என்னைக் காதலிப்பதாகவும் என்னைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதாகவும் கூறினார். “சார், உங்களை என் அப்பா மாதிரி நினைத்துள்ளேன். உங்கள் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். தயவுசெய்து இதுபோல் பேசாதீர்கள்” எனக் கூறினேன்.

ஆனால் அவர் என்னைச் சமாதானப்படுத்தி சந்திக்க முயற்சித்தார். ஒருமுறை என்னுடன் பணிபுரியும் ஒருவரிடம் போனைக் கொடுத்து நான் பணியில் இருப்பதாகச் சொல்லச் சொன்னேன். தொடர்ந்து வந்த அழைப்புகளை நான் எடுக்கவில்லை. அதன் பின்னரும் அழைப்பு வந்ததால் மரியாதை நிமித்தமாக நானே எடுத்தேன். அவர் தாம் பேசியதற்காக மன்னிப்பு கேட்டார். அப்போதும் தேனாம்பேட்டை அலுவலகத்திற்கு வர முடியுமா புதிய ப்ராஜெக்ட் தொடர்பாகப் பேசவேண்டும் என்றார். நான் எனது ஸ்டுடியோ பணியில் பிஸியாக இருக்கிறேன் என்று கூறிவிட்டேன்.

அப்போது சன்டிவியில் பணியாற்றிய ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அவரிடமும் வைரமுத்து மொபைல் எண் வாங்கித் தொல்லை கொடுத்துள்ளார். அந்தப் பெண் சன் டிவியின் இணை இயக்குநரிடம் புகார் அளித்ததும் வைரமுத்து அதன்பின் அவரைத் தொடர்புகொள்ளவில்லை. அதன் பின் நான் அவரது அழைப்பை எப்போதும் எடுக்கவில்லை.

பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தீர்களா? எப்படிச் சமாளித்தீர்கள்?

நேர்மையாகக் கூற வேண்டுமென்றால் நான் இதுபோன்ற பல புகார்களைத் திரைத்துறையில் கேள்விப்பட்டிருக்கிறேன். இது ஒன்றும் புதிதல்ல. எனக்கு ஏதும் நிகழாததால் இது குறித்து புகார் அளிக்க வேண்டும் என நான் விரும்பவில்லை. எனது பெற்றோரிடம் என்ன நடந்தது என்று கூறினேன். அவர்கள் என்னை நம்பினர்.

முன்னதாகவே இது குறித்து உங்களைப் பேச தடுத்தது எது? இப்போது ஏன் இதுகுறித்து பேசுகிறீர்கள்?

நான் இது குறித்துப் புகார் அளிக்கவில்லை. எனது பெரும்பாலான தோழிகளிடம் இதுபற்றி கூறினேன். இன்னொரு பாடகி ஒருவர் வைரமுத்துவைப் பார்க்கச் செல்லும்போது அவரது தந்தையை உடன் அழைத்துச் செல்லுமாறு கூறினேன். பின்னர் வைரமுத்து அந்தப் பெண்ணை போனில் அழைத்து ஏன் உன் அப்பாவைக் கூட்டிவந்தாய் என்று கேட்டுள்ளார்.

சின்மயி தொடர்ந்து வைரமுத்து குறித்து பாலியல் புகார்களை அளித்தபோது நான் வெளியில் வந்து சொல்லவேண்டும் என நினைக்கவில்லை. இப்போதும் அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நிற்கவேண்டும் என்றே விரும்புகிறேன். எனது அனுபவம் குறித்து சின்மயிக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். பல புகார்கள் வந்துகொண்டிருப்பதால் எனது புகாரைத் தவறவிட்டுவிடுவார் என நினைத்தேன். ஆனால் அவர் அதைப் பகிர்ந்தார்.

அடுத்த இரு நாள்களில் சின்மயியை தவிர வேறு யாரும் பொதுவெளியில் பேச முன்வரவில்லை. அவரது புகாரை நான் நம்புகிறேன். எனவே அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என விரும்பினேன். அவரைப்பற்றி எனக்குத் தெரியாது இருப்பினும் என்னைப்போன்றே அவரும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் பக்கம் நிற்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும். அவர்களது பணி, ஆளுமை குறித்து தீர்ப்பு வழங்கக் கூடாது”