நடிகர் ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்து நடிப்பது ஒருவித பதற்றத்தையும் அதே வேளையில் மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது என நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்களில்  ஒருவருமான குஷ்பூ தெரிவித்துள்ளார் . நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குதிக்கப் போவதாக கூறி அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில் அவர் அடுத்தடுத்த திரைப்படங்களிலும் கமிட்டாகி தொடர்ந்து நடித்து வருகிறார். ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பையடுத்து அவரது திரைப்படங்களுக்கு  அவரது ரசிகர்கள் சமீபகாலமாக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். 

இதுவரையில்  167 படங்களில் நடித்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் 168 ஆவது படம் ,  தலைவர் 168 என்ற பெயரில் இயக்கப்பட்டு வருகிறது .  இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை  குஷ்பு மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .  தமிழில் நடிகர் ரஜினிகாந்த் , பிரபு சேர்ந்து நடித்த தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் குஷ்பு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் .  இந்த படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார் குஷ்பு ,  பிறகு மன்னன் ,  பாண்டியன் ,  அண்ணாமலை போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் அவர்,  பிறகு அரசியலில் இறங்கிய நடிகை குஷ்பு தேசிய அளவில்  காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக உயர்ந்துள்ளார் .  இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 168 ஆவது படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு கமிட்டாகியிருக்கிறார். 

ரஜினியுடன் ஜோடிபோட ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று  பல நடிகைகள்  காத்திருக்கும் நிலையில் மீண்டும் ரஜினியுடன் குஷ்பு ஜோடி சேர்ந்திருக்கிறார் .  இப்படத்தில் நடிகை மீனா ,  கீர்த்தி சுரேஷ் ,  உள்ளிட்ட நடிகைகள் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .  இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு டிசம்பர் 22 ஆம் தேதி முதல் ஐதராபாத்தில்  நடக்கும் தலைவர் 168 வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன் இந்த படத்தில் நடிப்பது ஒருவித பரபரப்பையும்   அதே சமயத்தில் மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.  நடிகர் ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருப்பது சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் குஷ்பு தெரிவித்துள்ளார் .