அஜித் - சிவா கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் விவேகம். அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்டவர்களுடன் ஹாலிவுட்டை சேர்ந்த சில கலைஞர்களும் பணியாற்றியிருக்கின்றனர்.

இவர்களுடன் நடிகர் கருணாகரனும் அஜித்துடன் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 24-ஆம் தேதி வெளியாக உள்ளது.

அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து கருணாகரன், “அஜித்துடன் நடிப்பேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அவருடன் நடிக்க வேண்டும் என்ற எனது பல நாள் கனவு நனவாகியுள்ளது.

முதன்முதலில் அஜித்தை மங்காத்தா ஷூட்டிங்கின் போது தான் பார்த்தேன். சோழிங்கநல்லூரில் என் அலுவலகத்திற்கு எதிரே தான் படப்பிடிப்பு நடந்தது. அவரை காண ஆவலாய் இருந்தேன். இப்போது விவேகம் படத்தில் அவருடன் நடித்திருக்கிறேன்.

என்னுடைய முதல்நாள் படப்பிடிப்பு செர்பியாவில் ஆரம்பமானது. ஷூட்டிங் ஆரம்பமான இரண்டு நாள் வரை நான், அஜித்தை தல-யாக தான் பார்த்தேன். அதனால் நான் இயல்பு நிலைக்கு வர இரண்டு நாட்கள் ஆனது. என்னுடைய நண்பர்கள் தினம் போன் செய்து அஜித் எப்படி இருக்கிறார், எப்படி பழகுகிறார் என்றெல்லாம் கேட்பார்கள்.

தன் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகள் முடிந்தால் கூட படப்பிடிப்பை விட்டு செல்ல மாட்டார், மற்றவர்கள் நடிக்கும் காட்சிகளை பார்த்து அன்றைய ஷூட்டிங் முடிந்து பின்னர் தான் அவர் புறப்பட்டு செல்வார்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஒரு நாள் படப்பிடிப்பில், அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. இயக்குநர் சிவா ஷூட்டிங் வேண்டாம் என்று சொன்னார். ஆனால், அஜித் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் நடித்தார்.

தெரியாத நபர்களாக இருந்தால் கூட அஜித்தின் உதவி மனப்பான்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விவேகம் படத்திலிருந்து நிறைய விஷயங்கள் கற்று கொண்டேன். ஒரு நண்பர் போன்று என்னுடன் பழகினார். படப்பிடிப்பில் ஒவ்வொருவரின் உடல்நலத்திலும் அதிக அக்கறை எடுத்து கொண்டார்” என்று நெகிழ்ந்தார் கருணாகரன்.