படத்துக்கு ‘96 என்று பெயர் வைத்துவிட்ட காரணத்துக்காகவோ என்னவோ விஜய் சேதுபதி, த்ரிஷா ஜோடி நேற்று படத்தின் 100 வது நாள் வெற்றி விழாவை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கொண்டாடி மகிழ்ந்தார்கள். ஆனால் நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் கலந்துகொள்ளவில்லை.

எந்த ஊரில் எந்த தியேட்டரில் என்கிற விபரம் தெரியவில்லை. ஆனால் நேற்று ‘96 படத்துக்கு 100வதுநாள் விழா சிறப்பாக நடந்தேறியது. திரிஷாவும் விஜய்சேதுபதியும் கலந்துகொண்டிருந்தாலும் வழக்கம்போல் விழா நாயகனாக மாறி கலக்கியவரென்னவோ இயக்குநர் பார்த்திபன் தான். 

ஆசை பட்றது ஒருத்தரை- ஆனா வாழ்க்கை பட்றது வேற ஒருத்தரோட...அப்படி இளையராஜா 75-க்கு தைச்ச சட்டை '96-100 Day function -க்குப் போட்டுட்டு வரவேண்டியதாயிடுச்சி’ என்று துவங்கிய பார்த்திபன்,’ எத்தனையோ நடிகர்கள் இருந்திருக்காங்க. மக்கள்கிட்ட பேசும்போது அப்படி ஒரு ஈர்ப்பு. அவங்களை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து ஒரு அமிர்தானந்தமயி என்ன பண்ணுவாங்களோ அது மாதிரி ஆம்பளை அமிர்தானந்தமயியா இருக்கார், விஜய் சேதுபதி.

தியாகராய பாகவதருக்கு நிறைய பெண் ரசிகைகள் இருந்திருக்காங்க. அவருக்குப் பிறகு, பெண்கள் மத்தியில் அப்படியொரு ஈர்ப்பு இருக்கு. அதுதான் எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கு. சில படங்களுக்கு மட்டும்தான் த்ரிஷா இல்லைனா நயன்தாரா. ஆனா, இந்தப் படத்துக்கு திரிஷா இல்லைனா த்ரிஷா மட்டும்தான்.

அவங்க நடிச்சிருக்க மாதிரியே தெரியலை. நான் முதன்முறையா திரிஷாவைப் பார்க்கும்போது நடிக்கிறீங்களா?னு கேட்டேன். மாட்டேன்னு சொல்லிட்டாங்க. இந்த மாதிரி எத்தனையோ ஹீரோயின்கள் வாழ்க்கையைக் கெடுக்கலாம்னு நினைச்சிருக்கேன். அதுல தப்பிச்சவங்கதான் திரிஷாவும் நயன்தாராவும். படம் முழுக்க நம்மளை ஏமாத்தி காக்க வெச்சு கடைசி வரைக்கும் ஒரு முறையாவது கட்டி பிடிக்கமாட்டாங்களானு ஆர்வமா இருந்தோம். அது இங்கே நடக்க இருக்கு" என்றவர் அடுத்து ஒரு படுபயங்கரமான காரியத்தில் ஈடுபட்டார்.

த்ரிஷா,விஜய் சேதுபதி இருவரையும் மேடை ஏற்றி ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக்கொள்ளச் சொன்னார். அங்ஙனமே இருவரும் ஆரத் தழுவிக்கொண்டனர். பார்வையாளர்கள் பரவசமடைந்தனர்.