தல அஜித், கடந்த சில வாரங்களாக வேப்பேரியில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில் அமைந்துள்ளது, ரைஃபிள் கிளப்பில், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் வந்து செல்லும் புகைப்படங்கள், சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது.

அஜித் தற்போது 'வலிமை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்புகள் நடந்து முடிந்துவிட்ட நிலையில், ஒரே ஒரு சண்டைக் காட்சியை மட்டும் வெளிநாட்டில் படமாக்க உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் ஏற்கனவே அறிவித்திருந்தார். விரைவில் அக்காட்சியும் படமாக்கப்பட்டு அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைய உள்ளது. 

மேலும் இந்த படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என படத்தின் இயக்குனர் எச். வினோத் சில தினங்களுக்கு முன், ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார். எனவே வலிமை அப்டேட் எப்போது வெளியாகும் என வழி மீது விழி வைத்து கார்த்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

இது ஒருபுறமிருக்க துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு அஜித் சென்ற போது, அவர் பயிற்சியாளரும் எப்படி மரியாதை கொடுக்கிறார் என்பது குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பயிற்சியாளர் ஏதோ சொல்ல உடனே எழுந்து நின்று, தனது தொப்பியை கழற்றி விட்டு மரியாதையுடன் பதில் சொல்கிறார் அஜித்.  முன்னணி நடிகராக இருந்தாலும், அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும்,  தலை கனமில்லாமல் தன்னுடைய பயிற்சியாளருக்கு தரும் மரியாதையை , அஜித்தை பார்த்து தான் ரசிகர்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.