சுஷாந்த் சிங்கின் காதலி அவருக்கு அதிக போதை மருந்துகளை கொடுத்ததாகவும், அதனால் அவர் எப்போதும் மயக்க நிலையிலேயே இருந்ததாகவும் அவரின் பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில், அவரது குடும்பத்தினர், நெருக்கமானவர்கள் புதிய தகவல்களை கூறிவருகின்றனர். இதனால் இந்த வழக்கில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் சுஷாந்த் சிங்கின் பாதுகாவலர் பிரபல ஆங்கில தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். ’’சுஷாந்திற்கு அவரது காதலி ரியா சக்ரபர்தி போதை மருந்துகளை தொடர்ந்து கொடுத்து வந்தார். இதனால் சுஷாந்த் எப்போதும் மயக்கி நிலையிலும், தூங்கிக் கொண்டும் இருந்தார்.

 

சுஷாந்திற்கு மருந்துகளை வாங்குவதற்காக என்னை மருந்து கடைக்கு ரியா அனுப்பினார். அதனால் பல நேரங்களில் கடை உரிமையாளர்கள் என்னை சந்தேகத்துடன் பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி அந்த மருந்துகளை சுஷாந்திற்கு கொடுக்கும்போது, அவர் பெரும்பாலான நேரம் தூங்குவார். ஐரோப்பா பயணத்திற்கு பிறகு, சுஷாந்த் மீண்டும் நோய்வாய்ப்பட்டார். அவர் எப்போதும் படுக்கையில் இருந்தார். அதற்கு முன்பு எப்போதும் நீச்சல், ஓடுதல், ஜிம்மிங் என ஏதாவது செயலில் ஈடுகொண்டிருப்பார்.

ரியா மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் சுஷாந்தின் வீட்டிற்கு அடிக்கடி தங்கள் நண்பர்களை பார்ட்டிக்கு அழைத்து, அவரின் பணத்தை பகட்டாக செலவு செய்வார்கள். எனினும் அந்த பார்ட்டிகளில் சுஷாந்த் கலந்து கொள்ள மாட்டார். ரியா மீது சுஷாந்தின் தந்தை சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை தான்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே சுசாந்தின் பயிற்சியாளர் சமீ அகமது என்பவரும், ரியா, போதை மருந்துகளை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல் ரியா அவருக்கு பரிந்துரைக்கப்படாத சில மருந்துகளை வழங்குவதாக சமீ தெரிவித்தார். போதை மருந்து கொடுக்கும் அளவை ரியா நிர்ணயித்ததாகவும், அவர் தான் சுஷாந்தை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றார் என்றும் பயிற்சியாளர் குற்றம் சாட்டினார். ரியாவுடனான தொடர்புக்கு பிறகு சுஷாந்தின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டதையும் தான் கவனித்ததாக தெரிவித்தார்.

34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் 14-ம் தேதி, மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான வழக்கை பீகார் போலீசார் மற்றும் மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை சுமார் 40 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. முன்னதாக சுஷாந்தின் தந்தையும், ரியா மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.