கொரோனாவின் தீவிரத்தை குறைக்கும் விதமாக மீண்டும் தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்த போதும், தியேட்டர்கள் திறப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 180 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தியேட்டர்களை நம்பி வாழும் லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பிழந்து தவித்து வந்தனர். 

மேலும் தியேட்டர்கள் திறக்கப்படாததால் சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, அனுஷ்காவின் நிசப்தம் உள்ளிட்ட பல படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன. புதுமுக இயக்குநர்களின் படங்களில் இருந்து டாப் ஹீரோக்களின் படம் வரை ஓடிடி தளத்தில் பேரம் பேசப்பட்டு, ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. 

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து மத்திய அரசிடம் இருந்து முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள் வரவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதல், மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுறுத்தல்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

 

இதையும் படிங்க: லட்சுமி மேனனுக்கு பதிலாக இந்த நடிகையா?... பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்க போகும் விஜய் சேதுபதி பட நாயகி...!

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு மத்திய அரசு 5ம் பொதுமுடக்க தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகளை 50 விழுக்காடு இருக்கைகளுடன் பயன்படுத்தலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்கள், வர்த்தகக் கண்காட்சிகள் ஆகியவை செயல்படவும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.