தனது 19 வயதில் “என்ட்லஸ் லவ்” என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானவர் டாம் குரூஸ். 1983 ம் ஆண்டு வெளிவந்த “லாஸின் இட்” திரைப்படத்தில் முதன்முறையாக ஹீரோவாக நடித்த டாம் குரூஸ், அதே ஆண்டு வெளிவந்த ரிஸ்கி பிசினஸ் மூலம் ஹாலிவுட்டின் வசூல் நாயகனாகவும் உயர்ந்தார். டாம் குரூஸ் நடித்த அதிரடி ஆக்‌ஷன் படமான மிஷன் இம்பாஸிபிள் உலக அளவில் வசூலில் தூள் கிளப்பியது. இதுவரை 5 பாகங்கள் வெளியான போதும் ரசிகர்களுக்கு அந்த படத்தின் மீதான ஈர்ப்பு சற்றும் குறையவில்லை. 

அதுமட்டுமின்றி காக்டெய்ல், ஸ்பேஸ் ஸ்டேஷன், த லாஸ்ட் சாமுராய் உட்பட ஏராளமான படங்களில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களை வாரிக் குவித்துள்ளார். இதுவரை 3 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட டாம் குரூஸ், 3 முறை கோல்டன் குளோப் விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஹாலிவுட்டில் வெளியான ஏராளமான விண்வெளி படங்களின் வரலாற்றையே மாற்றி எழுத தீர்மானித்துள்ளார். 

டாம் குரூஸ் அடுத்து விண்வெளி தொடர்பான படம் ஒன்றை தயாரித்து நடிக்க உள்ளார். அந்த படத்தை ஒரிஜினலாக விண்வெளியில் ஷூட் செய்ய திட்டமிட்டுள்ளாராம். பூமியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளாராம். இதற்கு ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாக நாசாவும் தெரிவித்துள்ளது. இதுவரை விண்வெளி சம்மந்தமான படம் என்றாலே செட் அல்லது கிரீன் மேட்டில் படமாக்கப்பட்டு வந்ததை முதன் முறையாக மாற்றி, நேரடியாக விண்வெளிக்கே சென்று படமெடுத்து வரலாறு படைக்க உள்ளார் டாம் குரூஸ்.