தியேட்டர்களில் படம் பார்க்கிற அனைத்து ரசிகர்களும் குழந்தையாக மாறி தனது படத்தை ரசிக்க வேண்டும் என்று எண்ணுபவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். விவகாரத்து ஆன பெற்றோருடன், அன்புக்காக ஏங்கி வளர்ந்த ஒரு குழந்தை, உலகமே திரும்பி பார்க்கும் இயக்குநராக மாறும் என்று அப்போது யாரும் கற்பனை செய்திருக்கமாட்டார்கள்.  பெரியவர்களின் அறிவு ஜீவிதனத்துடன் போட்டி போடுவதை விட கஷ்டம், குழந்தைகளின் கற்பனை உலகை கண் முன் காட்டுவது. அப்படி குழந்தைகளுக்கான படங்கள் தான் இன்று ஸ்டீவனின் அடையாளமாக மாறியுள்ளது. 

பள்ளி காலத்தில் கிடைத்த சினிமா அனுபவங்களைக் கொண்டு திரையில் காலடி எடுத்து வைத்த ஸ்பீல்பெர்க், "ஜாஸ்" திரைப்படம் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். பாதி படம் வரை சுறாவை காட்டாமல் ஆர்வத்தை தூண்டிய ஸ்டீவன், கடைசி நேரத்தில் சுறாவை வைத்து கதிகலங்க வைத்திருப்பார். அதன் பின்னர் 'ஈடி', 'இண்டியானா ஜோன்ஸ்' போன்ற படங்கள் மூலம் கற்பனைக்கும் எட்டாத மாய உலகை கண்முன் விரியவைத்தார். குறிப்பாக 'இண்டியானா ஜோன்ஸ்' திரைப்படம் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை சிம்மாசனத்தில் அமர்த்தியது. 

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஸ்பீல்பெர்க், அடுத்து எடுத்தது சாதாரண அவதாரம் அல்ல விஸ்வரூபம். ஆம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாம் பார்க்காமல் இருந்த, கற்பனைகளில் மட்டுமே உலவி வந்த "டைனாசர்" என்ற அற்புத உயிரினத்தை நம் கண்முன் கொண்டு வந்த படம் "ஜூராசிக் பார்க்". பட்டி, தொட்டி எல்லாம் வசூலில் பட்டயைக் கிளப்பிய அந்த படம், ஸ்பீல்பெர்க்கிற்கு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றுத் தந்தது. 

பேன்டஸி படங்களை மட்டுமல்ல, கல் நெஞ்சம் கரைக்கும் "ஷிண்லர் லிஸ்ட்" போன்ற திரைப்படங்களையும் தன்னால் எடுக்க முடியும் என நிரூபித்தார்.ஹிட்லரிடம் இருந்து 1000 யுதர்களை காப்பாற்றப் முயலும், தனி ஒருமனிதனின் கதையை காண்போர் கலங்கும் விதமாக எடுத்து அசத்தினார். 

'பி.எஃப்.ஜி',  'ட்ரான்ஸ்பாமர்ஸ்', "சேவிங் பிரைவேட் ரியான்" போன்ற படங்களும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் வசூல் சாதனைக்கு சிறந்த உதாரணங்கள். கற்பனை உலகை கைகளில் தந்த ஹாலிவுட் மகாராஜாவிற்கு ஹாப்பி பர்த்டே!