பழம்பெரும் நடிகர் ஜெர்ரி ஸ்டில்லர், உடல்நலக்குறைவு காரணமாக, தன்னுடைய 92 வயதில் காலமானதற்கு, இவரின் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

ஹாலிவுட் திரையுலகத்தில் முன்னணி காமெடியனாக இருந்தவர் ஜெர்ரி ஸ்டில்லர். நியூ யார்க்கில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்த இவருக்கு, கடந்த சில வருடங்களாகவே, வயது மூப்பு காரணமாக சில உடல்நல  பிரச்சனைகள் இருந்து வந்தது. இதற்கான சிகிச்சையும் எடுத்து வந்தார். 

இந்நிலையில், மே 11 ஆம் தேதி அன்று இவர் உயிரிழந்தார். இவருடைய மனைவி, அன்னி மியரா கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு எமி ஸ்டில்லர் என்ற மகளும், பென் ஸ்டில்லர் என்ற மகனும் உள்ளனர். பென் ஸ்டில்லர், தற்போது பல ஹாலிவுட் படங்களில்,  நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். 

தன்னுடைய தந்தை மரணம் அடைந்த தகவலை தெரிவித்த அவர், “எனது தாய்க்கு 62 வருடங்கள் சிறந்த கணவராகவும், எனக்கு சிறந்த தந்தையாகவும் இருந்தார்” என்று கூறி ஜெர்ரி ஸ்டில்லரை பெருமை படுத்தியுள்ளார். இவருடைய மறைவு ஹாலிவுட் திரையுலக பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நடிகர் ஜெர்ரி ஸ்டில்லர்,  ஹாலிவுட் திரைப்பட காமெடி நடிகர் என்பதை தாண்டி, பல்வேறு டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும், வெப் சீரிஸ், மற்றும் மேடை நாடகங்களிலும் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.