’உள்ளூர் காவி பக்தாஸ் சிலர் இந்தித் திணிப்புக்கு ஆதரவாக ஜால்ரா அடித்து வரும் நிலையில்,’ தூய்மையான மொழியை நீங்கள் பேச வேண்டுமென்றால் திராவிட மொழிகளைத் தான் பேச வேண்டும்’என்று இந்தி நடிகரும், பாடகருமான ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகரும் ‘விக்கி டோனர்’ புகழ் இந்தி நடிகருமான ஆயுஷ்மான் குரானா பஞ்சாபில் பிறந்தவர். தனது அரசியல், சினிமா குறித்த கருத்துக்களை தனது சொந்த வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து எழுதிவரும் அவர், நேற்று தான் 2017ல் இந்தித் திணிப்பு குறித்து எழுதிய பதிவு ஒன்றை காலத்தின் அவசியம் கருதி மீள் பதிவு செய்துள்ளார்.

 அதில் இந்தி மொழியில் பெர்சியம் மற்றும் அரேபிய மொழியின் தாக்கம் இருப்பதை நெஞ்சை நிமிர்த்தி இந்தி தேசியம் பேசுபவர்கள் உணர வேண்டும். தூய்மையான மொழியை நீங்கள் பேச வேண்டுமென்றால் திராவிட மொழிகளைத் தான் பேச வேண்டும். அவை தான் வேற்றுமொழி கலப்பில்லாத தனித்துவம் வாய்ந்த மொழிகள்.

தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ். இந்தியை போற்றுபவர்கள் இதனை எளிதாக உணர வேண்டும். இந்தியாவில் அதிகமாக பேசப்படுவது இந்தி மொழியாக இருந்தாலும் அதனை பேசத்தெரியாதவர்களிடம் திணிக்கக்கூடாது. இப்படிச் சொல்லும் நானும் ஒரு இந்தி மொழி விரும்பி தான்.இப்படி நடந்துகொள்ளும் பரந்த மனப்பான்மையை இந்திமொழி தெரிந்தவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும்’ என்று  தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார் ஆயுஷ்மான் குரானா.