மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்த "அன்பானவன், அடங்காதவன், அசராதவன்" படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. அப்படத்தில் நடித்த சிம்புவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, முன்பணமாக 1.51 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பள பாக்கியை பெற்றுத் தரக்கோரி நடிகர் சங்கத்தில் சிம்புவும், படத்தால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சிம்புவிடமிருந்து வசூலித்து தரும் படி மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்திலும் மாற்றி, மாற்றி புகார் கூறியிருந்தனர். 

இதுகுறித்த பஞ்சாயத்து போய் கொண்டிருந்த சமயத்தில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தன்னை பற்றி சோசியல் மீடியாவில் அவதூறு பரப்புவதாக கொந்தளித்தார் சிம்பு. இதையடுத்து மைக்கேல் ராயப்பனிடம் ஒரு கோடி ரூபாய் மன நஷ்ட ஈடு கேட்டு சிம்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. தற்போது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரிகளை நியமித்துள்ளதால், இரு சங்கங்களின் தனி அதிகாரிகளையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் என விஷால் தரப்பில் கோரிக்கைவைக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கோரிக்கை தொடர்புடைய திருத்த மனுவை தாக்கல் செய்ய சிம்புவிற்கு அறிவுறுத்தி, வழக்கை அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.