’ஒரிஜினல் இந்திப்படத்தில் என்னென்னெ காட்சிகள் இருந்ததோ அதைத்தான் தமிழில் ரீ மேக் செய்திருக்கிறோம்.ஆனால் கலாச்சாரம் என்ற பெயரில் ஏகப்பட்ட கட் கொடுத்து எங்கள் கடுமையான உழைப்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள்’என தமிழக சென்சார் போர்டு மெம்பர்கள் குறித்து புலம்பித் தள்ளியிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

பல மாதங்களாகத் தயாரிப்பிலிருந்து ஒரு வழியாகக் கடந்த வாரம் சென்சாருக்குப்போன காஜல் அகர்வாலின் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் மிக மோசமான ஆபாசக் காட்சிகள்,இரட்டை அர்த்த வசனங்கள், பெண்ணுக்குப்பெண்ணே முத்தமிடும் லிப் லாக் காட்சிகள் போன்ற பல ஆட்சேபகரமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக  25க்கும் மேற்பட்ட கட்டுகளை சென்சார் போர்டு அறிவித்தது. 

கங்கணா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியான ‘குயின்’ படம்  4 தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் ஆகிறது. காஜல் அகர்வாலை நாயகியாகக் கொண்டு தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ எனவும், தமன்னாவை நாயகியாகக்கொண்டு தெலுங்கில் ‘தட் இஸ் மகாலெட்சுமி’ எனவும் மஞ்சிமா மோகனை நாயகியாகக் கொண்டு மலையாளத்தில் ‘ஜம் ஜம்’ எனவும் பருல் யாதவ்வை கதா நாயகியாகக்கொண்டு கன்னடத்தில் ‘பட்டர்ஃபிளை’ எனவும் உருவாகியுள்ளது. 

நான்கு மொழிகளிலும் மனுகுமரன் தயாரித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னட பதிப்பை நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தை நிறைவு செய்து சென்சாருக்கு அனுப்பிய படக்குழுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சென்சார் துறை பல இடங்களில் காட்சிகளின் சில பகுதிகளை வெட்டச்சொன்ன சென்சார் போர்ட்,  சில காட்சிகளில் ஆடியோவை மட்டும் வெட்ட, சில காட்சி ஆடியோ, வீடியோ இரண்டையும் வெட்டி உள்ளனர். மொத்தமாக 25க்கும் மேற்பட்ட  இடங்களில் வெட்டியுள்ளதால் படக்குழுவினர் மறு சீராய்வுக் குழுவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த படத்தின் மலையாள, கன்னட பதிப்புகளுக்கு தணிக்கைத் துறை யு/ஏ சான்றிதழ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் காஜல் அகர்வாலின் மார்பகத்தை அவரது தோழி ஒருவர் அழுத்திப்பிடிக்கும் காட்சி ஒன்று வெளியாகி அநேகரின் அதிர்ச்சிக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

இதனால் படம் பத்திரமாக ரிலீஸாகுமா என்று காஜல் அகர்வாலிடம் சந்தேகம் எழுப்பப்பட்டபோது, ‘இந்தி கியூன் படத்தில் இல்லாத காட்சிகள் எதையும் நாங்கள் ஷூட் செய்யவில்லை. ஆனால் தமிழில் மட்டும் எதற்கு இத்தனை கட்டுப்பாடுகள் என்றுதான் புரியவில்லை. ஒன்றும் இல்லாத விஷயங்களுக்கெல்லாம் கட் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் பெரும் போராட்டம் நடத்தியாவது அப்படியே படத்தைத் திரைக்குக் கொண்டுவருவார்கள் என்று நம்புகிறேன்’என்கிறார்.