தமிழ் சினிமாவுக்கு, அதுவும் குறிப்பாக தியேட்டர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்ற புலம்பல் குரல்கள் அதிகம் ஒலிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ‘இனி முழுக்க முழுக்க ஆன் லைன் கட்டணத்தில்தான் தியேட்டர்கள் இயங்கவிருக்கின்றன. அதிலும் ஒரே நேரத்தில் எத்தனை டிக்கெட் புக் பண்ணினாலும் வெறும் 30 ரூபாய் மட்டுமே சர்வீஸ் சார்ஜாக வசூலிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்திருப்பது நல்ல செய்திபோல் தெரிந்தாலும் அது தொடர்பாக சில குழப்பங்களும் நீடிக்கின்றன.

தியேட்டர்காரர்களும், டிக்கெட் முன் பதிவு செய்யும் இணையத்தள முதலாளிகளும் சேர்ந்து ஒரு டிக்கெட்டுக்கு முன் பதிவுக்கான கட்டணமாக ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 30 ரூபாயைக் கூடுதலாகக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள்.இதில் வரும் லாபத்தில் பாதி தியேட்டர்காரர்களுக்கும், மீதி இணையத்தளம் நடத்துபவர்களுக்கும் என்று எழுதப்படாத விதி. இந்த பர்சென்டேஜ் பிரிப்பில் கூடுதலாக யார் கொடுத்தார்களோ அவர்களுடைய இணையத்தளத்துடன் தங்களது தியேட்டரை இணைத்தார்கள் தியேட்டர்காரர்கள்.

இத்தனையாண்டுகளாக கொள்ளையோ கொள்ளையாக அடித்துக் கொண்டிருந்த அவர்களிடத்தில் இருந்து தயாரிப்பாளர்கள் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டுப் பார்த்தார்கள். அது சினிமா தியேட்டரின் ஆளுமைக்கு உட்பட்டது. தர முடியாது என்று தியேட்டர்காரர்கள் சொல்லிவிட்டார்கள். எனவே அந்தத் தொகை அதிகமாக இருப்பதால்தான் மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வரவும் யோசிக்கிறது என்று அமைச்சரிடம் சொல்லி இப்போது அதற்கு அரசு உத்தரவாக "எத்தனை டிக்கெட் எடுத்தாலும் 30 ரூபாய்தான் வசூலிக்க வேண்டும்..." என்று சொல்ல வைத்திருக்கிறார்கள்.

முதலில் இதற்கு அரசுக்கு உரிமையிருக்கிறதா என்று தெரியவில்லை. இணையத்தள முன் பதிவு என்பது இணையத்தளங்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் இடையிலான ஒப்பந்தம். அதில் அரசு எந்தவிதத்தில் தலையிட முடியும் என்று தெரியவில்லை.ஆனால், தியேட்டர் முன் பதிவு வழியாகவும் கூட தியேட்டர் கட்டணங்கள் அரசு விதித்துள்ள கட்டணங்களைத் தாண்டக் கூடாது என்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டால்தான் அந்த உத்தரவு செல்லுபடியாகும். வெறுமனே மைக்கை நீட்டிவிட்டார்களே.. என்பதற்காகவே  அமைச்சர் இப்படி அளந்துவிட்டுப் போயிருக்கிறார்..! அடுத்து தியேட்டர்காரர்கள் இந்த அமைச்சரை  நேரில் பார்த்து ஏதாவது "கவனித்துவிட்டால்" இந்த அரசாணையும் வரவே வராது..! [முகநூலில் சரவணன்]