Head teachers understand the status of other teachers - actor Thamu Advis ...
தலைமை ஆசிரியர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்த்தால் மற்ற ஆசிரியர்களின் நிலையை புரிந்து கொள்ள முடியும் என்று வேலூரில் நடைப்பெற்ற புத்தாக்க பயிற்சி முகாமில் நடிகர் தாமு பேசினார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆற்றல் ஊட்டும் முகாம் என்ற தலைப்பில் புத்தாக்க பயிற்சி முகாம் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமை வகித்துப் பேசினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் அமுதா, சாம்பசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் தாமு கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியது:
“தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மன அழுத்தமின்றி பணிபுரிய வேண்டும். அதற்கு அவர்கள் மாணவர்களுடன் இன்முகத்துடன் பழகவேண்டும். மன அழுத்தத்தை போக்க சிரித்து பேச வேண்டும். அடிக்கடி கைத்தட்ட வேண்டும்.
ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் விதம் முக்கியமானது. மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து ஆர்வத்துடன் பாடத்தை கவனிக்கும் வகையில் கற்பிக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை நினைத்து பார்க்க வேண்டும். அப்போதுதான் மற்ற ஆசிரியர்களின் நிலையை புரிந்து கொள்ள முடியும்” என்று அவர் பேசினார்.
