கவிதை, கவிதை... கமல் பாணியிலேயே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்...!

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இன்று தனது தந்தையின் நினைவு தினம் என்பதால் பரமக்குடிக்கு சென்றுள்ள கமல்ஹாசன், அங்கு அவரது தந்தையின் திருவுருவச் சிலையை திறந்துவைத்கிறார். இதற்காக கமல்ஹாசன் தனது மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌சரா ஹாசன் மற்றும் குடும்பத்தினருடன் பரமக்குடியில் முகாமிட்டுள்ளார். உலக நாயகனுக்கு திரைத்துறையினர் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் சோசியல் மீடியாவில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து #HBDKamalHaasan, #HappyBirthdayKamalhaasan, #Ulaganayagan, #Kamal60 ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங், உலக நாயகனுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழர்களை உற்சாகப்படுத்துவதற்காக தமிழில் ட்வீட் போட்ட ஹர்பஜன் சிங். அன்று முதல் தமிழர்களின் சுக, துக்கங்களுக்கு டுவிட்டர் மூலம் குரல் கொடுத்து வருகிறார். முக்கியமான நேரங்களில் ஹர்பஜன் போடும் ட்வீட்டுகள் தமிழக ரசிகர்களை மிகவும் உற்சாகமடையச் செய்யும். அதன்படி உலக நாயகனை சும்மா வாழ்த்தினால் நல்லா இருக்காது என்பதால் அவர் தொனியிலேயே அசத்தலாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ஹர்பஜன். வாழ்த்து, விமர்சனம், கண்டனம் என அனைத்தையும் புரியாத புதிரான வார்த்தைகளைக் கொண்டு அழகான கவிதை வடிவில் பதிவிடுவதில் வல்லவர் கமல் ஹாசன். அதே பாணியில் ஹர்பஜன் சிங்கும், உலக நாயகனுக்கு பிறந்த நாள் பதிவிட்டுள்ளார். 

அதில், சினிமா என்னும் துறவை
துரத்தி சிறகு செதுக்கிய பறவை 
உங்கள் அறுபத்து ஐந்து அகவை 
எமக்கு விஸ்வரூப உவகை.
களிப்புற்றோம் காணீர்! 
காலம் இருக்கட்டும் 
உம் பெயர் சொல்லி! 

கமல் சார் உங்களுக்கு உங்கள் தொனியில் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் மகிழ்ச்சி #HBDKamalHaasan Anna என குறிப்பிட்டுள்ளார்.