நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பெல்லாம்  ஒன்றே ஒன்றுதான். எப்போது அவருக்கு திருமணம் ஆகப்போகிறது என்பதுதான் அது.  ஆண்டு ஆகஆக வயதும் அதிகரித்துக் கொண்டே போகிறது,  ஆனால் அவரின் அழகும் பொலிவும் கூடிக்கொண்டேதான் இருக்கிறது. இன்னும் கூட இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் பெண் சூப்பர் ஸ்டாராகவே திரையில் கோலோச்சுகிறார் நயன்தாரா.

இந்நிலையில் நடிகர் சிம்பு, பிரபுதேவா, ஆகியோருடன் ஏற்பட்ட காதல் முறிவுக்குப் பின்னர்  இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவனுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலை தொடர்ந்து வருகிறார்.  இருவருமே திருமணம் செய்து கொள்ளாமல் ஜோடியாக வாழ்ந்து வருவது பல விமர்சனங்களை எழுப்பிவரும் நிலையில், அவர்களின் இரு தரப்பு குடும்பத்தினருக்குமே அது சஞ்சலத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து விரைவில் திருமணம் செய்து கொள்ள நயன்- விக்னேஸ் ஜோடி முடிவு செய்துள்ளதாகவும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்தை ஐரோப்பாவில் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக  கூறப்படுகிறது. அவருக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே அளவிற்கு அவர் திருமணம் முடிந்தால் நயனை திரையில் பார்க்க முடியாதோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தன் காதலர் விக்னேஷ்  சிவன் தயாரிப்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்துள்ள திரைப்படத்துடன், விஜயுடன் நடித்துள்ள பிகில்,  தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் நடித்துள்ள  சைரா நரசிம்ம ரெட்டி, ஆகிய படங்களும் அடுத்தடுத்து திரைக்குவர உள்ளன.

 

படங்கள் வெற்றியடைந்த  கையோடு சினிமாவுக்கு முழுக்கு போடப்போகிறார் நயன்தாரா என்ற தகவல்  பரவி  ரசிகர்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது. ஆனால் திருமணமானாலும் தொடர்ந்து திரைப்படத்தில் நடிக்கவே நயன்தாரா விரும்புவதாக அவரின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நயன்தாரா ரசிகர்களை மட்டுமல்ல  தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது.