நடிகை நயன்தாரா முதல் பல வருடங்களுக்கு பின் மீண்டும் வெள்ளி திரையில் ரீஎண்ட்ரி கொடுக்கும் நடிகை லைலா வரை, பேய் படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அதே வழியை பின்பற்ற துவங்கியுள்ளார் நடிகை ஹன்சிகா.

முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களை தவிர்த்து, தனி ஹீரோயினாக நடிக்கும் படங்களை தான் அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது 'குலேபகவாலி' படத்தின் இயக்குனர் கல்யாண் இயக்க உள்ள ஹாரர் படத்தில் இணைந்துள்ளார்.

 ஏற்கனவே  இயக்குனர் சுந்தர் சி இயக்கிய, 'அரண்மனை' படத்தில் பேயாக நடித்திருந்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது மீண்டும் கல்யாண் இயக்கவுள்ள புது படத்தில் பேயாக நடிக்கிறார்.

 இந்த படம் பற்றி இயக்குனர் கல்யாண் கூறுகையில்.... இப்படம் காமெடி மற்றும் திகில் அனுபவங்கள் கலந்து பேய் படமாக உருவாக உள்ளது. கதாநாயகன் இல்லாத சோலோ ஹீரோயினாக நடிகை ஹன்சிகா நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் அவருடைய லுக் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும் கதையை கேட்டவுடன் ஹன்சிகாவிற்கு மிகவும் பிடித்துவிட்டதால் உடனடியாக இந்த படத்தில் நடிக்க சம்மதித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருவதாகவும், ஜூன் மாதம் தொடங்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை, பெங்களூர், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.