ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பஞ்சாயத்துகளின் வரிசையில், நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் ‘மஹா’ பட ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர்கள் வலைதளங்களில் இந்து-முஸ்லீம் சர்ச்சைகளாகி மாறிவருகின்றன,

‘மஹா’ ஹன்ஷிகா மோத்வானியின் 50வது படம். யு.ஆர்.ஜமீல் என்பவர் இப்படத்தை இயக்கிவருகிறார். கடந்த வாரம் வெளியிடப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் காசி போன்ற புண்ணிய ஸ்தலத்தின் பின்னணியில் ஒரு தெய்வீக நாற்காலியில் தெனாவட்டாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு காவி உடையில் ஹன்ஷிகா கஞ்சா புகைப்பது போன்ற படங்கள் வெளியாகின.

இது தொடர்பாக சற்று தாமதமாக கொதிக்க ஆரம்பித்த இந்து ஆர்வலர்கள், ‘இதே போல பர்தா அணிந்த முஸ்லிம் பெண்ணை உன்னால தம் அடிக்க வைக்க முடியுமா? என்று துவங்கி இயக்குநரை மிகவும் பெர்சனலாக கடித்துக் குதற ஆரம்பித்தார்கள். சிலர் ஹன்ஷிகாவுக்கு பர்தா அணிவித்து அதே போஸ்டரை பதிவிடவும் செய்தார்கள்.

துவக்கத்தில் அப்பதிவுகளுக்கு பதில் எதுவும் சொல்லாமல் இருந்த ஜமீல், விசயம் விபரீதமாகப் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்து,  நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இதில் மதத்தை புண்படுத்தும் உள்நோக்கம் எதுவும் எனக்கு இல்லை. பார்வையாளர்களை சட்டென்று திரும்பிப் பார்க்கவைக்க மட்டுமே இப்படி ஒரு போஸ்டரை தயார் செய்தேன். இதற்கு ஜாதி,மத உள்நோக்கம் கற்பிப்பதை உடனே நிறுத்துங்கள்’ என்று கதற ஆரம்பித்திருக்கிறார்.