Rowdy Baby : தனுஷின் யூடியூப் சேனல் முடக்கம்... ரவுடி பேபி பாடலும் ஹேக் செய்யப்பட்டதால் அப்செட் ஆன ரசிகர்கள்
Rowdy Baby : தனுஷ் நடத்தும் வொண்டர்பார் நிறுவனத்தின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டு உள்ளது. மேலும் அதில் இருந்த பாடல்கள் மற்றும் வீடியோ அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளன.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தனது வொண்டர்பார் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் உள்ளார். சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான தனுஷ், நானும் ரவுடி தான், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, காக்கா முட்டை, மாரி போன்ற பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார்.
இவர் தயாரிப்பில் கடைசியாக வெளியான படம் மாரி 2. இப்படம் தோல்வியை சந்தித்தாலும், இதில் இடம்பெறும் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக யுவன் இசையில் தனுஷ் மற்றும் தீ பாடிய ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. குறிப்பாக இதன் வீடியோ பாடல் யூடியூப்பில் 1 பில்லியனுக்கு மேல் பார்வைகளை பெற்று சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில், தனுஷ் நடத்தும் வொண்டர்பார் நிறுவனத்தின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டு உள்ளது. மேலும் அதில் இருந்த பாடல்கள் மற்றும் வீடியோ அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக இந்திய அளவில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடலாக விளங்கி வந்த ரவுடி பேபி பாடலும் யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அப்பாடலை மீண்டும் எப்படியாவது மீட்டுவிடுமாறு யூடியூப் இந்தியா நிறுவனத்துக்கு டுவிட்டர் வாயிலாக தனுஷ் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஹேக்கர்களால் முடக்கப்பட்ட அந்த சேனலை மீண்டும் மீட்கும் முயற்சியும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்...கோலிவுட்டுக்கு டாடா காட்டிவிட்டு ராஜமவுலி பட ஹீரோஸை டார்கெட் செய்யும் ஷங்கர்... அடுத்த படம் யாருடன் தெரியுமா?