இந்தப் படத்தில் கதையின் நாயகனாக 'அட்டக்கத்தி' தினேஷ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக 'கயல்' ஆனந்தியும், மற்றொரு முக்கிய கேரக்டரில் 'பிக்பாஸ்' புகழ் ரித்விகாவும் நடித்துள்ளனர். 

முனீஷ்காந்த், ஜான் விஜய் உள்ளிட்ட பலர்  இந்தப் படத்திற்காக கைகோர்த்துள்ளனர். பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியுள்ளார். 'தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்', 'மகிழ்ச்சி' ஆகிய ஆல்பங்களின் இசையமைப்பாளர் தென்மா, இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் எல்லாம் முடிந்து, குண்டை நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கும் படக்குழு, படத்தை தணிக்கைக்கு அனுப்பியுள்ளது. அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள  'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளனர். 

அத்துடன், குண்டு படத்திற்கு " U " சான்றிதழ் கொடுத்து படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை, இயக்குநரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தின் டிரைலர் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. 

இதனைத்தொடர்ந்து, கடந்த நவம்பர் 4ம் தேதி வெளியான  மாவுலியோ!மாவுலி!! வீடியோ பாடலும் ஹிட்டடித்துள்ளது. படத்தின் இசை வரும் நவம்பர் 11ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

தொடர்ந்து, படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட தமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலையும் இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு திரைப்படம் நிச்சயம் புது அனுபவத்தை கொடுக்கும் என இப்படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.