தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை விட பல மடங்கு பஞ்சாயத்துகளுடன் சதா சர்வகாலமும் தகராறுகளுடனேயே காலம் தள்ளிக்கொண்டிருக்கும் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் சங்கமான கில்டு மிக விரைவில் இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

கில்ட் திரைப்பட அசோசியேஷனில் கணக்கு வழக்குகளை பராமரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். சந்தா செலுத்த சங்க அலுவலகத்திற்கு வந்த சில அங்கத்தினர்களிடம் கில்ட் அலுவலக சிப்பந்திகள் சந்தா தொகையை வாங்க மறுத்ததினால் அந்த அங்கத்தினர்கள் இதனை புகாராகத் தெரிவிக்க வேண்டி சம்பந்தப்பட்ட நீதிபதி்யை சந்திக்க.நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.

சரியாக மூன்று மணிக்கு நீதிபதி வர அவர் முன்னிலையில் கமிட்டி மெம்பர்கள் கூட்டம் நடந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் சில பிரச்சினைகளின்போது தலைவர் ஜாகுவார் தங்கத்திற்கும், தயாரிப்பாளர் நிதின் பிலிம்ஸ் சுரேஷ்குமாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடந்ததாம், .

நீதிபதி அவர்களிடம் கணக்கு வழக்குகள் மற்ற சந்தாத் தொகை கணக்குகளை ஒப்படைக்கப்பட வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மறுபடியும் அடுத்த மாதம் பதினெட்டாம் தேதி மீண்டும் கூடுவதாகச் சொல்லி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது முடிந்து நீதிபதி வெளியே வர, காத்திருந்த சில அங்கத்தினர்கள் நீதிபதியிடம் தங்களிடமிருந்து சந்தா தொகையைப் பெற மறுத்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். இதைக் கண்டு ஜாக்குவார் தங்கம் கோபமடைந்து, நீதிபதி முன்பாகவே "யாருடா நீங்க" என்று சத்தமிட்டு அவர்களை அடிக்க கை ஓங்கியிருக்கிறார்.

மேலும் கடந்த பிப்ரவரி 28-ம் தேதியன்றே சங்க நிர்வாகத்தினரின் பதவிக் காலம் காலாவதி ஆகிவிட்டதை நீதிபதியிடம் அங்கத்தினர்கள் தெரிவிக்க, "சங்கமே போச்சு...நீங்க இப்போ நீங்க தலைவரே இல்லையே..." என்று அவர் ஜாக்குவாரிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். இதையொட்டி, கோர்ட் வளாகத்தின் உள்ளேயே அடிதடி சண்டை நடந்துள்ளது..

அங்கிருந்த போலீஸார் அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இனி கில்ட் தயாரிப்பாளர் சங்கம் யார் கையில்?...இனி சங்கத்தின் மொத்த அங்கத்தினர்கள்தான் கூடி முடிவெடுக்க வேண்டும். இதை தலைவர் நடக்க விடுவாரா?.. அல்லது சங்கம் அடுத்த வாரம் முதல் மூடப்படுமா?.. என்பதே இப்போதைய கேள்வி..!