பாகுபலி புகழ் இயக்குனர் ராஜமௌலி புதியதாக, இயக்கும் படத்தில், 3 வெளிநாட்டு நடிகைகள் ஹீரோயின்களாக நடிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த பாகுபலி 1 மற்றும் 2 பல கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்தன. இந்திய சினிமாவில் பல சாதனைகளை இந்த படங்கள் படைத்தன. பாகுபலி 1, 2 படங்களின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ராஜமௌலி, புதிய படம் ஒன்றை இயக்கும் பணிகளை தொடங்கியுள்ளார். 

இதில், தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார்கள், ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடிக்கின்றனர். பெரும் பட்ஜெட்டில் தயாராக உள்ள இந்த படத்திற்கு, ஹீரோயின்கள் யார் என இதுவரை முடிவு செய்யப்படாத நிலை நீடித்தது.  

இதுநாள் வரை, திரைக்கதை தயாரிப்பில் ராஜமௌலி கவனம் செலுத்தி வந்தார். தற்போது, ஹீரோயின்களை தேர்வு செய்ய தொடங்கிவிட்டார் எனக் கூறப்படுகிறது. அதன்படி, 3 வெளிநாட்டு அழகிகளை, ஹீரோயின்களாக அவர் இறுதி செய்துள்ளாராம். 

படத்தின் கதைக்கு, கிளாமர் ஏற்றும் வகையில், இந்த அழகிகளை தயார்படுத்தியுள்ளாராம் ராஜமௌலி. ஆனால், அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவர்கள், பிரபலமான நடிகைகளாக இருப்பார்கள் என்பதால், அதன் மூலமாக, படத்திற்கு சர்வதேச சந்தையில் நல்ல மார்க்கெட் கிடைக்க, ராஜமௌலி திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.