மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை, இந்த படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் செயல்பட்டுவரும் முன்னணி திரைப்பட விநியோக நிறுவனங்களிடமும், விநியோகஸ்தர்களிடமும் படத்தைத் தமிழகத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவுட்ரேட் முறையில் நேர்கொண்ட பார்வை படத்தை வாங்க யாரும் ரெடியாக இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெமினி நிறுவனம் இந்தப் படத்தின் உரிமையைப் பெற்றிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதனால் இரு வாரங்களாக நீடித்து வந்த இழுபறி வியாபாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் படத்தின் தென்னிந்தியத் தியேட்டர்ஸ் உரிமையை சுமார் 42 கோடி ரூபாய்க்கு ஜெமினி நிறுவனம் பெற்றிருப்பதாகக் சொல்லப்படுகிறது. இதனால், ஜெமினி நிறுவனத்திடமிருந்து தமிழகத்தின் ஏரியா உரிமை மற்றும் கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகளை வியாபாரம் செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

இதனையடுத்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் ஆடியோ உரிமை விற்பனையாகியுள்ளது. இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘ஹீரோ’. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கியது. இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி இதன் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இவானா மற்றொரு கதாநாயகியாக இணைந்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்துள்ளார்.

டிசம்பர் 20ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் வியாபாரமும் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் படத்தின் ஆடியோ உரிமையை லகரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் விஜய் நடித்த பைரவா, அஜித் நடித்த விஸ்வாசம், விஸ்வரூபம் 2, கேஜிஎஃப் ஆகிய படங்களுக்கான ஆடியோ உரிமையை பெற்றிருந்தது.  


விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அதிதி ராவ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்த 96 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட்டானது. படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஜய் சேதுபதி அடுத்ததாக செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித்குமார் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதாகத் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துவரும் அவர், படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

இந்நிலையில், டெல்லி பிரசாத் இயக்கத்தில் துக்ளக் தர்பார் என்ற பெயரில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாகக் கூறப்பட்டது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் அந்தப் படத்தில் கதாநாயகியாக அதிதி ராவ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. விஜய் சேதுபதியும் அதிதியும் ஏற்கெனவே செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தனர். ஆனால், அந்தப் படத்தில் அதிதி, அரவிந்த்சாமியின் காதலியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.