தான் கூறிய கதையை முழுமையாக கூட கேட்காமல் தனது படத்தில் நடிக்க விஜய் மறுத்துவிட்டதாக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.  தமிழில் மின்னலே படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் கவுதம் வாசுதேவ் மேனன். இதன் பிறகு இவர் இயக்கிய காக்க காக்க திரைப்படம் சூர்யா கேரியரில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியது. அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து தோல்விப்படங்களில் நடித்து வந்த கமலுக்கும் வேட்டையாடு விளையாடு மூலம் செம பிரேக் கொடுத்தவரும் இவர் தான்.   காக்க காக்க படமும் வேட்டையாடு விளையாடு படமும் போலீசார் மீதான தமிழக மக்களின் எண்ணத்தையே மாற்றும் வகையில் இருந்தது.  மேலும் தமிழுக்கு கிரைம் த்ரில்லர் படங்களை அறிமுகம் செய்து புதிய டிரண்டை உருவாக்கியவர் கவுதம் வாசுதேவ் மேனன்.  படத்தை கிளாசாகவும் மாசாகவும் எடுத்துக் கொண்டிருந்த கவுதம் மேனனுடன் இணைய அப்போதே விஜய், அஜித், விக்ரம் ஆகியோர் போட்டி போட்டனர். கவுதம் மேனனும் நல்ல ஒரு ஸ்க்ரிப்டை ரெடி செய்து வைத்துக் கொண்டு நல்ல மாஸ் ஹீரோவை தேடிக் கொண்டிருந்தார்.  அப்போது தான் விஜயிடம் இருந்து கவுதம் மேனனுக்கு அழைப்பு வந்தது. நேரில் சென்ற கவுதம் வாசுதேவ் மேனன் விஜயிடம் தனது மாஸ் ஹீரோ சப்ஜெக்டின் ஒன்லைனை கூறியுள்ளார்.  கவுதம் மேனன் சொன்ன கதையின் ஒன்லைன் விஜய்க்கு பிடித்துப்போய்விட்டது. உடனடியாக படத்திற்கு யோகன் என்று பெயர் சூட்டப்பட்டது. மேலும் யோகன் படத்தின் முதல் பாகம், இரண்டாம் பாகத்தை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அடுத்தடுத்து வேலைகள் நடைபெற்றன.  துப்பாக்கியுடன் விஜய் கொடுத்த அட்டகாசமான போசுடன் யோகன் அத்தியாயம்  ஒன்னு படத்திற்கு செய்தித்தாள்களில் விளம்பரம் எல்லாம் வந்தது.
 ஆனால் திடீரென யோகன் திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று விஜய் மறுத்துவிட்டார். இதனால் கவுதம் மேனன் மட்டும் அல்ல விஜய் ரசிகர்களுமே கூட அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எதற்காக விஜய் யோகன் படத்தில் நடிக்க மறுத்தார் என்று கவுதம் மேனன் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் படம் நிறுத்தப்பட்டு சுமார் 6 ஆண்டுகளுக்கு பின்னர், அண்மையில் இணையதளம் ஒன்றுக்கு கவுதம் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் விஜயுடன் இணைய இருந்த யோகன் படம் நின்று போனதற்கு என்ன காரணம் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கவுதம், யோகன் படத்தின் ஒன் லைன் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனடியாக போட்டோ சூட்டுக்கு ஓ.கே சொன்னார். எல்லாம் நல்லபடியாக நடைபெற்றது. அதன் பிறகும் பல தடவை விஜயை சந்தித்து யோகன் குறித்து பேசினேன். பின்னர் கதையை முழுமையாக தயார் செய்துவிட்டு விஜயை சந்தித்தேன்.  யோகன் கதையின் 75 சதவீதத்தை தான் கூறியிருப்பேன், முழுமையாக கூட நான் கூறி முடிக்கவில்லை. ஆனால் விஜய் உடனடியாக உங்களை மீண்டும் கூப்பிடுகிறேன் என்று மட்டும் என்னிடம் கூறினார். அதன் பிறகு அவர் கூப்பிடவில்லை. இது தான் யோகன் படம் நின்று போக காரணம். ஆனால் கண்டிப்பாக யோகன் படத்தை நான் ஒரு நாள் இயக்குவேன் என்று கவுதம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.