தர்பார் திரைப்படம் தான் ரஜினியின் கடைசி திரைப்படமாக இருக்கும், அந்த படம் வெளியாக பிறகு ரஜினி அரசியலில் தீவிரம் காட்டுவார் என்கிற தகவல் சிறுத்தை சிவாவுடனான பட அறிவிப்பு மூலம் தூள் தூளானது.

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ந் தேதி அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினி. அதன் பிறகு ரசிகர் மன்றத்தின் பெயரை மக்கள் மன்றமாக மாற்றி, புதிய நிர்வாகிகளை நியமித்து அரசியல் நடவடிக்கைகள் தீவிரமாக்கினார் ரஜினி. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக ரஜினியின் அரசியல் நடவடிக்கைகள் முழுக்க முழுக்க பேட்டிகளாக மட்டுமே உள்ளன. அதிலும் கூட சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளிப்பதோடு ரஜினி அரசியல் செய்வதை நிறுத்திக் கொண்டார்.

அதன் பிறகு காலா, பேட்ட, 2.0 என ரஜினி படங்கள் வரிசையாக வெளியாகின. பொங்கலுக்கு தர்பார் வெளியாக உள்ளது. தமிழ் புத்தாண்டுக்கு சிறுத்தை சிவா – ரஜினி கூட்டணி திரைப்படம் வெளியாகலாம் என்கிறார்கள். அல்லது அந்த படம் தீபாவளி வெளியீடாக இருக்கும் என்ற கூறுகிறார்கள். இந்த நிலையில் கவுதம் மேனன் ரஜினியை சந்தித்து ஒரு கதை சொல்லியிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. ரஜினிக்கும் கதை பிடித்துவிட்டதால் சிறுத்தை சிவா படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருக்கும் என்று சொல்கிறார்கள்.

மேலும் 2021 சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக அரசியல் திரைப்படம் ஒன்றில் நடித்து வெளியிடும் முடிவில் ரஜினி இருப்பதாக கூறுகிறார்கள். அந்த படம் இயக்குனர் வெற்றிமாறன் ரஜினிக்கு கூறியது என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். ரஜினி எப்போதுமே இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்கிற பார்முலாவை பின்பற்றி வந்தார். ஆனால் அரசியல் அறிவிப்புக்கு பிறகு ஒரே வருடத்தில் இரண்டு படங்கள் கூட ரிலீஸ் ஆகிறது.

ரஜினி மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறர் என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய போது, ஏற்கனவே தலைவருக்கு வயதாகிவிட்டது என்கிற ஒரு பிரச்சாரம் முன் வைக்கப்படுகிறது. மேலும் விஜயகாந்த், கமல் போன்றோர் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் அரசியலுக்கு வந்தார்கள்.

ரஜினி அப்படி இல்லை, அவர் அரசியலில் இருக்கும் போது கூட முன்னணி இயக்குனர்கள், முன்னணி தயாரிப்பாளர்கள் படத்தில் நடிப்பதன் மூலம் மார்க்கெட் போய் சினிமாவிற்கு வரவில்லை என்கிற விஷயத்தை ஆழமாக நிருபிக்க இப்படி செய்கிறார் என்று கூறுகிறார்கள்.