அத்திவரதரை தரிசிக்க வந்த வகையில் மீடியாக்களின் மிக முக்கியமான டாபிக் ஆகியிருக்கிறார் மதுரையில் பிரபல சண்டியர் வரிச்சியூர் செல்வம். அவர் அத்திவரதர் தரிசனத்துக்கு வந்திருந்தபோது அணிந்திருந்த நகைகளின் மொத்த மதிப்பு மட்டும் தோராயமாக 70 லட்சம். தகவல் உபயம் சாட்சாத் அவரே.

அத்திவரதரை தரிசிக்க வி.ஐ.பி.க்கள் பலரே பாஸ் வாங்குவதற்காக பரிந்துரை கடிதங்களுடன் பல நாட்கள் காத்திருக்கும் நிலையில் வரிச்சியூர் செல்வம், மிகவும் எளிதாக கூட்டமாக சென்று சாமி தரிசனம் செய்திருப்பது போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரிச்சியூர் செல்வம் வி.ஐ.பி. பாஸ் மூலமாக தரிசனம் செய்துள்ளதாகவும், இதற்கு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் உதவி செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே போலீசாரும், வரிச்சியூர் செல்வம் தரிசனம் செய்தது எப்படி? என்பது பற்றிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நிலையில் வரிச்சியூர் செல்வம், இணையதளம் ஒன்றுக்கு அதிரடியாக பேட்டி அளித்துள்ளார். அதில் அத்திவரதர் தரிசனம் பற்றியும், நானும் வி.ஐ.பி. தான் என்றும் பல்வேறு வி‌ஷயங்களை பகிர்ந்துள்ளார்.  சண்டியர்களின் இன்னொரு முகம் மிகவும் பரிதாபத்துக்குரியது என்பதை இந்தப்பேட்டியில் தெரிந்துகொள்ளலாம். இதோ அவரது பேட்டி...

நான் அணிந்துள்ள நகைகள் கிருஷ்ணர், பிள்ளையார், மீனாட்சி அம்மனோட மயிலு, சிங்க வாகனம்.நான் கடவுளின் பெரிய பக்தன். 36 ஆண்டு ஐயப்பனை பார்க்க போயிருக்கேன். கோவிலுக்கெல்லாம் போய்தான தீரணும். அத்திரவரதரை பார்த்ததில் என்ன தப்பு இருக்கு. கடவுள் நாட்டமில்லா நான் போய் இருந்தா நீங்க சொல்லலாம்.

கே:- அத்திவரதர் மேல எப்படி ஈடுபாடு?

ப:- அடுத்த 40 வரு‌ஷம் கழிச்சி கட்டாயம் நாம இருக்க மாட்டோம். அதனால் அத்திவரதரை போய் பார்த்தோம். இதற்கு அப்புறம் இன்னொரு வாய்ப்பு கிடைக்காது. அதனால் போனேன். இவ்வளவு பிரச்சினை வரும்னு தெரிஞ்சிருந்தா அத்திவரதரை தூரத்துல நின்னே பார்த்துட்டு வந்திருக்கலாம்.

கே:- வி.ஐ.பி. பாஸ் எப்படி வாங்குனீங்க?

ப:- நான் வைத்திருக்கும் கார் 1 கோடி ரூபாய் எங்கிட்ட 7 காரு இருக்கு. நான் வி.ஐ.பி. இல்லயா?

கே:- தாதா கெட்அப்பில் கோவிலுக்கு சென்றது ஏன்?

ப:- எனக்கு 4 பேரன் பேத்திங்க. 2 பிள்ளைங்களுக்கும் ரெண்டு ரெண்டு பிள்ளையங்க இருக்காங்க நான் தாதா கிடையாது. தாத்தா. நான் சினிமாவில் நடிப்பதால் ஆடை அலங்காரத்தோடு எப்போதும் இருப்பேன். மாறுபட்டு தெரியணும் என்பதற்காகத் தான் இந்த தோற்றம். மொத்தம் 250 பவுன் நகை போட்டு இருக்கேன்.

ஒரு பத்திரிகையில் இணை ஆசிரியராக இருக்கேன். பைனான்ஸ் பண்றேன். நம்மள பத்தி தப்பு தப்பா எழுதுறாங்க. நாமளும் ஒரு ரிப்போர்ட்டரா இருக்கணும்னு ஆசை. அதனால பத்திரிகை துறையிலயும் இருக்கேன்.

கே:- மொத்தம் எத்தனை வழக்கு உள்ளது?

ப:- செஞ்சது, போனது 3, 4 தான் இருக்கும். போலீஸ் போட்ட வழக்கு 30 இருக்கும்.

கே:- தினசரி வாழ்க்கை எப்படி?

ப:- காலையில் 11 மணிக்கு எழும்புவேன் குளித்து முடித்து விட்டு சினிமாவுக்கு போவேன். போகாத படமே இருக்காது. பொழுது போக்கே படம்தான். வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாளும் பப்புல இருப்பேன். ஞாயிற்றுக்கிழமை சென்னை பப்புல வாழ்வேன். ரிட்டையர்ட் வாழ்க்கையை ஜாலியா வாழ்கிறேன். சென்னை இல்லன்னா பெங்களூர் போவேன். இந்த 3 நாள் போக 4 நாள் பேரக்குழந்தைகளோட பொழுதை போக்குவேன்.

எனக்கு ரோல் மாடல் விஜய் மல்லையா. அவர் எனக்கு பிடிக்கும். அவர்தான் இந்த வாழ்க்கையை வாழ்கிறார். ஏழையா பிறப்பது நம்மளோட தப்பு இல்ல. சாகும்போது ஏழையா சாகக்கூடாது.

கே:- பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடினீர்களே? உங்களுக்கும் அரசியல் ஆசை வந்து விட்டதா?

ப:- என்னோட அய்யா, அய்யாவ பெத்தவங்க என 4 பேர் 50 வயதுக்கு மேல உயிரோட இருந்தது இல்ல. எனது மகள்களுக்கு கல்யாணம் செய்தபோதும் யாருக்கும் சாப்பாடு போடல. இதனால் 50-வது பிறந்த நாளுக்கு 100 கிடா வெட்டி சாப்பாடு போட்டேன். 4 ஆயிரம் பெண்களுக்கும், 4 ஆயிரம் ஆண்களுக்கும் இலவச சேலையும், வேட்டி சட்டையும் கொடுத்தேன். அந்த விழாவுக்கு 30 ஆயிரம் பேர் வந்திருந்தாங்க. அத்தனை பேருக்கும் சோறு போட்டேன். ஊர்காரங்க மகிழ்ச்சிக்காக அமெரிக்கா, ரஷ்யா, இந்தோனேசியாவில் இருந்து 4 பெண்களை கூட்டிட்டு வந்து பெல்லி’ டான்ஸ் ஆட வைத்தேன்’என்று அந்தப் பேட்டியில் அதிரடி கிளப்புகிறார் வரிச்சியூர் செல்வம்.