திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை சுஜித் எதிர்பாராதவிதமாக விழுந்தான். அவனை மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், #SaveSujith #PrayForSujith போன்ற ஹேஷ்டேக்குள் மூலம் சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் சுஜித்துக்காக பிரார்த்தனை செய்து வந்தனர். 

இந்நிலையில், சுமார்  80 மணி நேரப்போராட்டத்திற்குப் பிறகு, குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. சுஜித் எப்படியும் திரும்பி வருவான் என நம்பிக்கையுடன் காத்திருந்த மக்களுக்கு இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை சுஜித் மறைவுக்கு திரையுலகைச்  சேர்ந்த பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி நமது பொறுப்பற்ற செயலால் ஏற்படும் 'பேரிழப்புகளை' நியாயப்படுத்துகிறோம், தப்பித்துக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், "உபயோகமற்ற ஆழ்துளை கிணறுகளை மூட போர்கால அடிப்படையில் அரசும், தனி மனிதர்களும் முயற்சி எடுக்க வேண்டும் - #SorrySujith #RIPSujith" என ஜிவி பிரகாஷ் பதிவிட்டுள்ளார். இதேபோல், பல்வேறு தரப்பினரும் குழந்தை சுஜித்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூகவலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.